பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு

தினகரன்  தினகரன்
பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல் சமாத் 28, ரஷித் கான் 22, கேப்டன் வில்லியம்சன், சஹா தலா 18, மணிஷ்பாண்டே 17 ரன் எடுத்தனர். வார்னர் டக்அவுட் ஆக கேதர்ஜாதவ் 3 ரன் அடித்தார். டெல்லி பந்துவீச்சில் ககிசோ ரபடா 3, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 135 ரன் இலக்கை துரத்திய டெல்லி அணியில், பிரித்வி ஷா 11 ரன்னில் வெளியேற ஷிகர் தவான் 37 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர்-கேப்டன் ரிஷப் பன்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்த டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 47 (41 பந்து), ரிஷப் பன்ட் 35 (21பந்து) ரன்னில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 4 ஓவரில் 12 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய அன்ரிச் நார்ட்ஜே ஆட்டநாயகன் விருதுபெற்றார். 9வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற டெல்லி 14 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. 8வது போட்டியில் 7வது தோல்வியை சந்தித்த ஐதராபாத்திற்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. அடுத்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு குறைவு தான். வெற்றிக்கு பின் டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் கூறியதாவது: தொடரில் முதல் சீசனில் நல்ல கட்டத்தில் இருப்பதாக விவாதித்தோம். 2வது சீசனையும் வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. நாங்கள் இந்த செயல்முறையில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 150-160 ரன் ஒரு நல்ல இலக்காக இருந்திருக்கும் என நினைத்தோம். ஆனால் அதைவிட குறைவாக கட்டுப்படுத்தினோம். உலகின் மிக வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் எங்களிடம் இருக்கிறார். அவர் எங்கள் அணியின் சொத்து என நினைக்கிறேன், என்றார். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது: நாங்கள் பேட்டிங்கில் நன்றாக தொடங்கவில்லை. பார்ட்னர் ஷிப்பும் அமையவில்லை. கடைசியில் சில ரன்களை பெற்றாலும் 25-30 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். டெல்லி அணியில் உள்ள 2 தரமான சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தனர். எங்களை கடினமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஒரு வேளை ஆரம்ப விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் அதிக ரன் எடுத்திருக்கலாம், என்றார்.

மூலக்கதை