காபூல் விமான நிலையத்தில் 169 பேர் பலி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவன் டெல்லி மாணவன்

தினகரன்  தினகரன்
காபூல் விமான நிலையத்தில் 169 பேர் பலி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவன் டெல்லி மாணவன்

புதுடெல்லி: காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 169 பேர் கொன்றவன், டெல்லியில் படித்த இன்ஜினியரிங் மாணவன் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்திய உளவுத்துறையின் அதிகாரிகள் கூறியதாவது:  காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் நடத்தி, 169 பேர் பொதுமக்களும், 13 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழக்க காரணமாக இருந்தவன் பெயர் அப்துல் ரஹ்மான். ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவன், டெல்லியில் இன்ஜினியரிங் கல்லூரில் படித்து வந்தான். இவனுடைய தந்தை தொழில்ரீதியாக அடிக்கடி டெல்லி வந்து செல்வார். இவனுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், தனது தற்கொலை படைக்கு மூளைச்சலவை செய்து ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டான். டெல்லியில் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தவும், குண்டுவெடிப்பு நிகழ்த்தவும் திட்டமிட்டான். இவனை கண்காணித்த டெல்லி தீவிரவாத ஒழிப்பு படை போலீசாரும், ரா அமைப்பினரும் 2017ம் ஆண்டு பொறிவைத்து பிடித்தனர். இவனை இந்தியாவில் தண்டிப்பதற்கு பதிலாக, சிறப்பு விமானம் மூலம் காபூலுக்கு நாடு கடத்தினர். அங்கு மத்திய உளவுத்துறை அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் சிறையில் இவனை அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்த சிறையில் இருந்த ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை தலிபான்கள் விடுவித்தனர். அப்போது, அப்துல் ரஹ்மானும் விடுதலையாகி வெளியே வந்தான். இவன் அமெரிக்க படையை பழிவாங்கும் நோக்கத்தில், காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான் என்பது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை