மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

தினகரன்  தினகரன்
மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

போபால்: மத்திய பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர்,   மீன்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, கால்நடை மற்றும் பால்வளத் துறை பொறுப்புகளை வகிக்கிறார். இவர் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. அதனால், 6 மாதங்களில் அவர் எம்பி.யாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பாளராக நேற்று முன்தினம் இவரை பாஜ அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் முடிகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தேதி செப்டம்பர் 27. அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை என்று இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பூபேந்திர குப்தா நேற்று இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மொத்த எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 230. இதில், ஆளும் பாஜ.வுக்கு 125 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2, சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு எம்எல்ஏ.க்களும், சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 4 பேரும் இருக்கின்றனர். 3 இடங்கள் காலியாக உள்ளன.  மத்திய பிரதேச மாநிலங்களவை எம்பி.க்களின் மொத்த எண்ணிக்கை 11. தற்போது பாஜ.வுக்கு 7 எம்பி.க்களும், காங்கிரசுக்கு 3 எம்பி.க்களும் உள்ளனர். காலியாக இருக்கும் ஒரு இடத்துக்குதான் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

மூலக்கதை