ருதுராஜ் அபார ஆட்டம் மும்பை அணிக்கு 157 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
ருதுராஜ் அபார ஆட்டம் மும்பை அணிக்கு 157 ரன் இலக்கு

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வேகத்தில் மில்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து வந்த மொயீன் அலியும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவர் மில்னி வேகத்தில் திவாரி வசம் பிடிபட்டார். சிஎஸ்கே 1.3 ஓவரில் 2 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, நெருக்கடி மேலும் அதிகரித்தது. அடுத்து வந்த ரெய்னா 4 ரன், தோனி 3 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சென்னை அணி 6 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ருதுராஜ் - ஜடேஜா இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். ருதுராஜ் - ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ஜடேஜா 26 ரன் எடுத்து (33 பந்து, 1 பவுண்டரி) பும்ரா வேகத்தில் போலார்டு வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பிராவோ அதிரடியில் இறங்க சிஎஸ்கே ஸ்கோர் மளமளவென எகிறியது. போல்ட் வீசிய 19வது ஓவரில் மட்டும் 24 ரன் கிடைத்தது. பிராவோ 23 ரன் (8 பந்து, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை ருதுராஜ் இமாலய சிக்சருக்கு தூக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் 69 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் 88 ரன் (58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), தாகூர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட், மில்னி, பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

மூலக்கதை