பணத்தை அள்ளித்தரும் தங்கச் சுரங்கம் டெல்லி-மும்பை விரைவுச்சாலை மாதம் ரூ.1,500 கோடி கொட்டும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி எதிர்பார்ப்பு

தினகரன்  தினகரன்
பணத்தை அள்ளித்தரும் தங்கச் சுரங்கம் டெல்லிமும்பை விரைவுச்சாலை மாதம் ரூ.1,500 கோடி கொட்டும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி எதிர்பார்ப்பு

புதுடெல்லி: ‘டெல்லி-மும்பை விரைவுச்சாலை 2023ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதும், அதன்மூலம் ஒன்றிய அரசுக்கு மாதம் ரூ.1500 கோடி வரை வருவாய் கிடைக்கும்,’ என்று ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் டெல்லி - மும்பை 8 வழி தேசிய விரைவுச்சாலை பணிகளை ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நடந்து வரும் டெல்லி-மும்பை தேசிய விரைவுச்சாலை திட்டம், 2023ல் நிறைவடையும். இச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதும் சுங்க கட்டணம் மூலம் ஒன்றிய அரசுக்கு மாதம் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைக்கும். கடந்த 7 ஆண்டுகளில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை ஒன்றிய அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் சுங்க கட்டணம் மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். தற்போது, ரூ.40 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடனில் தத்தளிக்கவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்காது. இது, ஒரு தங்கச் சுரங்கம். அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதால் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதாரம் வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.ஆப்கானிஸ்தானில் முதலீடு பிரதமர் முடிவு எடுப்பார்கட்கரி மேலும் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியா தனது சொந்த முதலீட்டில் செய்து கொடுத்துள்ளது. இன்னும் சில திட்டங்கள் நிலுவையில் உள்ளன. நீர்வளத்துக்காக அந்நாட்டில் சல்மா அணை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால், அந்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பற்றி பிரதமர் மோடி முடிவு எடுப்பார்,’’ என்றார்.

மூலக்கதை