மோடி என்றால்...'மோஸ்ட் டியரஸ்ட்'

தினமலர்  தினமலர்
மோடி என்றால்...மோஸ்ட் டியரஸ்ட்

*டில்லியை மாற்றிய கில்லி!நல்ல மாற்றம் என்பது தோற்றத்திலும் இருக்க வேண்டுமென்பதில், ரொம்பவே அக்கறை காட்டுவார் மோடி. தோற்றத்துக்கு அவர் அதீத முக்கியத்துவம் காட்டுகிறார் என்று குறை சொல்பவர்கள் உண்டு. தமிழகம் வந்தால் அவர் வேஷ்டி கட்டுவார்; ராஜஸ்தான் சென்றால் தலைப்பாகை அணிவார். அது வேஷம் கட்டும் விஷயமில்லை. நானும் உங்களில் ஒருவன் என்று மக்களிடம் காண்பிப்பதற்கான ஒரு வழிமுறை. ஆடை வடிவமைப்பிலும், அவற்றுக்கான நிறங்களைத் தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் அக்கறை அலாதியானது. சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அவர் அணியும் தலைப்பாகையை (டர்பன்) ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.ஒரு தலைவராக தன் தோற்றத்தை மட்டுமல்ல; தலைநகரின் தோற்றத்தையே மாற்றுவதற்கு முயன்ற முதல் பிரதமரும் மோடிதான். கடந்த ஏழாண்டுகளில் டில்லியில் உள்ள மத்திய அரசின் கட்டடங்கள் பல, சர்வதேச விருந்தினரையும் சுற்றுலாப் பயணிகளையும் விழிவிரிய வைக்கும் அளவுக்கு வசீகரத்தோடு வானளாவ உயர்ந்திருப்பதற்கு அடித்தளம், அவரது ஆலோசனை தான்; நியூ சென்ட்ரல் விஸ்டாவின் அசத்தல் வடிவமைப்பு, மோடியின் மூளையில் உதித்ததே.

குஜராத்தில் சபர்மதி ஆற்றுக்கு புத்துயிரும் புதுப்பொலிவும் தந்ததும் நரேந்திரமோடியின்ஞானம்தான். கங்கையை நதிகளின் தாய் என்று மோடி சொல்வார். சபர்மதியின் தோற்றத்திலும், தன்மையிலும் அவர் குஜராத் முதல்வராக இருந்து ஏற்படுத்திய மாற்றம்தான் கங்கையைத் துாய்மையாக்கும் திட்டத்துக்கு கால்கோலிட்டது. இப்போது வாரணாசி, பழமையும், பாரம்பரியமும் மாறாத நகரமாக, அதேநேரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும், அத்தியாவசியத் தேவைகளையும் உள்ளடக்கிய நகரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

*அசந்து போனது அமெரிக்கா!குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. அப்போதும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை. நம் நாட்டு எம்.பி.,க்கள், இன்னொரு நாட்டுக்குக் கடிதம் எழுதி, நம் நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தின் முதல்வரை எப்படி இழிவுபடுத்தலாம் என்ற வருத்தம்தான் அவரிடம் இருந்தது. அவர் பிரதமரான பின், அதே அமெரிக்காவின் அதிபர் ஒபாமா, தங்கள் நாட்டுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்கத் துாதர் அதிகாரப்பூர்வ விசாவுடன், மோடியை சந்தித்தார்.

அந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பாததால், அமைதியாக ஏற்றுக்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றார். ஏராளமான ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாயின. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு உரிமைகளும் மீட்டுத்தரப்பட்டன.அன்றிலிருந்து இன்று வரை, அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் மோடியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம், இதற்கு முன் எந்த இந்தியப் பிரதமருக்கும் கிடைக்காத வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து அசந்து போனது அமெரிக்கா.*தேகத்தின் நலம்... தேசத்தின் பலம்!சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதில் தெளிவானவர் மோடி. நம் தேகத்தின் நலமே, தேசத்தின் பலம் என்று நம்புபவர். நெருங்கிய நண்பர்கள், சக அமைச்சர்கள், வழிகாட்டிகள் என யாரைப்பார்த்தாலும் அவரின் முகத்திலிருந்து ஓர் உள்ளார்ந்த புன்னகை முதலில் வெளிப்படும். அதன்பின், ஆரோக்கியத்தின் மீது அவர் பார்வை திரும்பும். மேலிருந்து கீழ் வரையிலுமாக, தன் பார்வையால் ஸ்கேன் செய்வார். உடல் பருமனாகவும், தொந்தியும் தொப்பையுமாகவும் இருந்தால், அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் படு சூடாக இருக்கும். அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, ஒரு பத்து கிலோவையாவது குறைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், 'நீங்க பிட் இல்லை' என்று நெத்தியடியாகச் சொல்லி விடுவார். அதன்பின் அவரே கொஞ்சம் ஆசுவாசமாகி, 'யோகா பண்ணுங்க; வெந்நீர் குடிங்க' என்று சொல்வார். அவருடைய ஆரோக்கிய அறிவுரைகளில் அடிக்கடி இடம்பெறுவது, வெந்நீர். அடுத்ததாக அவருடைய உடல் ஆரோக்கியத்திற்கான முக்கியக் காரணி, விரதம். நோன்பிருக்கும் நாட்களில் அவரை சாப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் பிடிக்காது. அப்படிச் சொன்னால், 'ப்ளீஸ்! என்னைய விட்ருங்க' என்று கனிவாகச் சொல்லிவிட்டு, தனியாகப் போய்விடுவார். நவராத்திரி பண்டிகைக் காலத்தில், ஒன்பது நாட்களும் மதிய உணவு அல்லது இரவு உணவு ஏதாவது ஒன்றை தியாகம் செய்வார். அத்தகைய நேரங்களில் உலர் பழங்களையும், வெந்நீரையும் குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வார்.

*குருவுக்கு மரியாதைமோடியின் அரசியல் வாழ்க்கைக்கு குருவாக இருந்தவர்கள் யார் யார் என்று பட்டியலிட்டால், அதில் வாஜ்பாயும், அத்வானியும் முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பார்கள். அவர்களை அடுத்து, அவருக்கு அரசியல் குருவாக ஒருவர் இருந்தார். அரசியல்ரீதியாக அவரும் இவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒரு குரு சிஷ்யன் உறவு இருந்தது. அந்த குரு, காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி. அவருக்கு பாரதிய ஜனதா அரசு தந்த பாரத ரத்னா விருது, ஒரு குருவுக்கு சிஷ்யன் செய்த சிறப்பு மரியாதை!தனி வாழ்வு, பொதுவாழ்வு, அரசியல், ஆன்மிகம், ஆரோக்கியம், பேச்சு, செயல்...என எதை எடுத்தாலும் அதில் மோடியின் தனித்துவம் தெரியும். இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்களின் அனுபவங்களை ஒப்பிட்டால், மோடியின் இருபதாண்டு அரசியல் அனுபவம் என்பது குறைவான காலமாகத் தெரியலாம். ஆனால் அவருடைய அரசியல் பயணம், குறைகளற்ற காலம். அந்த வகையில் இந்தியாவிலேயே அவருக்கு இணையான தலைவரென்று இன்றளவில் ஒருவரும் இல்லை என்பதே ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. ஆம்... MODI... MOST DEAREST PERSON... MOST DIFFERENT PRIME MINISTER!

*'சீக்ரெட் சிக்ஸர்'நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுவதாக இருந்தால், அதற்கான உரையை அவரே தயாரிப்பார். அதிலுள்ள நிறை, குறைகளை ஆராய்வார். அதன் விளைவுகளைப் பற்றி யோசிப்பார்; உரையை பலமுறை வாசிப்பார். ஒத்திகையும் பார்ப்பார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இதையெல்லாமே செய்து பார்த்த அவர், அந்த முடிவைப் பற்றி தன் அமைச்சரவை சகாக்களிடம் கூட பகிரவில்லை, விவாதிக்கவில்லை. தனக்கு விசுவாசமான இரண்டு பேரிடம் மட்டும் அதைப் பற்றி கலந்தாலோசித்தார்.முடிவெடுத்தார்; உரை நிகழ்த்தினார். முடக்கப்பட்டது பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப்பணம். கடைசிப்பந்தில் அடிக்கப்பட்ட சீக்ரெட் சிக்ஸர் அது!

*குன்றிலிட்ட தீபமானது குஜராத்குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அதில் முக்கியமானது, 'துடிப்பான குஜராத்' திட்டம். அத்திட்டத்துக்கு டெல்லி நார்த் ப்ளாக்கிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. மத்திய அரசின் நிதித்துறை ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை. அதற்காக அவர் 'அப்செட்' ஆகவில்லை. தனித்து நின்று தன் இலக்கை வென்றெடுத்தார். குஜராத்தில் குவிந்தது சர்வதேச முதலீடு; தொழில் துறையில் இன்று வரை கம்பீர நடை போடுகிறது காந்தி பிறந்த மண்!

மோடி வெற்றி சூத்திரம்சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்... அனைவரோடும் ஒன்றிணைந்து, அனைவரின் முன்னேற்றத்துக்காகவும், அனைவரின் நம்பிக்கையோடும்,
அனைவரின் முயற்சியுடனும்...!இதுதான் பிரதமர் மோடியின் வெற்றிச்சூத்திரம். டீம் ஒர்க்... அதில் அதீத நம்பிக்கை கொண்டவர் மோடி. அதனால்தான் எல்லா விஷயங்களிலும், எல்லோரையும் அவர் இணைத்துக் கொள்வார். நல்ல தலைவனுக்கான தன்மைகளில் தலை
சிறந்ததுஅணியை சிதையாமல் ஒருங்கிணைப்பது, அமைதியாக வழிகாட்டுவது, அளவீடுகளின்றி அன்பைப் பொழிவது... அத்தனையிலும்மோடி அல்டிமேட்... அன்பு, அரவணைப்பு, ஆளுமை என தலைமைப்பண்பில் தல, தளபதி எல்லாமே மோடிதான்!

2 பேர்... 2 மசோதா... 2 ஆண்டுகள்எவ்வளவு அசுரத்தனமான பெரும்பான்மை உள்ள அரசாக இருந்தாலும், ஆட்சிக்காலத்தின் இறுதியாண்டில் எந்தவொரு உறுதியான திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மூன்றாம் நான்காம் ஆண்டுகளில், அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பதால், சர்ச்சைக்குரிய சவால்கள் நிறைந்த எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவும் இயலாது. இதையெல்லாம் தன் தொலைநோக்குப் பார்வையில் அறிந்து, இரண்டு திட்டங்களை ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டியவர் மோடி. 2019 தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கியமான இரண்டு வாக்குறுதிகள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதும், முத்தலாக் தடைச்சட்டமும்தான். அதற்கு பா.ஜ., அதிகாரத்தில் இருக்க வேண்டும்; அதுவும் அசாத்திய பலத்தோடு இருக்க வேண்டுமென்று நினைத்தார் மோடி. முதல் ஐந்தாண்டு ஆட்சியில் இந்திய மக்களிடம் சம்பாதித்திருந்த ஊழலற்ற அரசு என்ற நற்பெயர்தான், இந்தத் தேர்தலுக்கு அவர் செலுத்திய முதலீடு.

பிரதமர் மோடியின் பின்னியெடுத்த பிரசாரம் அந்த வெற்றியை எளிதாக்கியது. அவருக்கு முதல் முறை பிரதமராக அளித்த ஆதரவை விட அதிகமான ஆதரவைத் தந்தார்கள் இந்திய மக்கள். இரண்டாம் முறையாக அவர் பிரதமரானதும், தன் விசுவாசத்துக்குரிய தளபதிகளான அமித்ஷா, அஜித் தோவல் இருவரையும் அழைத்து அவர் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வந்தன காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்து நீக்கமும், முத்தலாக் தடைச்சட்டமும். ஒரு வேளை மோடி இன்னும் சில மாதங்கள் தாமதித்திருந்தால் கொரோனாவும், ஆப்கானிஸ்தான் பிரச்னையும் சேர்ந்து, இந்த இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைத் தடுத்திருக்கும். அதுதான் மோடியின் அசர வைக்கும் தொலைநோக்கு!

*பேரும் தெரியும் ஊரும் தெரியும்!பா.ஜ., பொதுச் செயலாளராக அவர் இருந்தபோது, தேசம் முழுவதிலும் இருந்து அவரைச் சந்திக்க நிர்வாகிகள் வருவார்கள். அவர்கள் வெவ்வேறு மாநிலத்தவராக, வெவ்வேறு மொழி பேசுபவராக இருப்பார்கள். ஆனால் அவர்களின் ஊரின் பெயரோடு அவர்கள் பெயரையும் சேர்த்துச் சொல்லி அழைத்து, அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு பிரச்னையைக் குறிப்பிட்டு அதைப் பற்றி விசாரிப்பார். அப்படியே ஆடிப்போவார்கள், அந்த நிர்வாகிகள்.
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் ஆகிய மாநிலங்களின் கட்சி பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தபோது, அந்த மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது, அந்தப்பகுதிக்கான கட்சி நிர்வாகியின் பெயரைச் சொல்லி அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலை கொடுப்பார். அப்போது மட்டுமில்லை; இப்போதும் அந்த மாநிலங்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றாலும், அவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக்கொண்டு விசாரிப்பார்.

* அது கேள்வியில்லை...வேள்வி!கொரோனா கோலோச்சத் துவங்கிய காலகட்டம்... பிரதமர் அலுவலகம் சார்பில், தேசத்தின் முக்கியமான ஆறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கான எந்த சடங்கு, சம்பிரதாயமும் இல்லை. நேரடியாக மேட்டருக்கு வந்தார் பிரதமர். அவர் கேட்ட ஒரே கேள்வி...''உங்களால் 60 நாட்களுக்குள், 100 கோடி ஊசிகளையும், குப்பிகளையும் தயார் செய்ய முடியுமா?'' என்பதுதான்.

ஐந்து கம்பெனிகளின் நிர்வாகிகள் வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தார்கள். ஒரே ஒரு நிறுவனத்தின் நிர்வாகி மட்டும் அதைச் செய்து விடலாம் என்று உறுதி தந்தார். அதற்கு பிரதமர் மோடி, 'இதற்காக அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான உதவியாக இருந்தாலும் அதை நாங்கள் நிச்சயம் செய்து தருவோம்' என்று பதிலுக்கு உறுதி தந்தார். வெறும் வாக்குறுதியில்லை. அந்த நிமிடமே அதற்கான ஆணைகளையும் பிறப்பிக்கிறார். அதுதான் அவருடைய தொலைநோக்கு.
அரசிடமிருந்து அபரிமிதமான உதவி கிடைத்ததால்தான், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிப்பு எளிதான காரியமாக மாறியது. இந்த கூட்டம் நடந்தது ஜூன் மாதத்தில், ஆகஸ்ட்டில் ஆறு மாநிலங்களில் 80 கோடி தடுப்பூசிகள் தயாராக இருந்தன. இதற்காக அவர் காட்டிய அக்கறை, ஈடுபாடு, ஆளுமை அத்தனையும் 'வேற லெவல்'. அவர் கேட்டது ஒரு கேள்விதான். ஆனால் அதுதான் கொரோனாவுக்குக் கொள்ளி வைத்த வேள்வி.
தகவல்கள்:

ஆர்.ராஜகோபாலன், செய்தியாளர், புதுடில்லி.

*டில்லியை மாற்றிய கில்லி!நல்ல மாற்றம் என்பது தோற்றத்திலும் இருக்க வேண்டுமென்பதில், ரொம்பவே அக்கறை காட்டுவார் மோடி. தோற்றத்துக்கு அவர் அதீத முக்கியத்துவம் காட்டுகிறார் என்று

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை