ஓடாமல் கிடக்கும் பழைய கேரள அரசு பஸ்களில் குப்பை அள்ள திட்டம்: ஊழியர் சங்கங்கள் கொந்தளிப்பு

தினகரன்  தினகரன்
ஓடாமல் கிடக்கும் பழைய கேரள அரசு பஸ்களில் குப்பை அள்ள திட்டம்: ஊழியர் சங்கங்கள் கொந்தளிப்பு

திருவனந்தபுரம்: ஓடாமல் கிடக்கும் கேரள அரசு பஸ்களை குப்பை அள்ள பயன்படுத்தும் திட்டத்திற்கு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக ஏராளமான பஸ்கள் இயக்கப்படாததால் நஷ்டம் மேலும் பல கோடி அதிகரித்துள்ளது.  இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்தை அதிகரிக்க நிர்வாக இயக்குனரான பிஜு பிரபாகர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, பஸ் நிலையங்களில் காலியாக உள்ள கடைகளை மதுக்கடைகளுக்கு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், ஓடாமல் கிடக்கும் பஸ்களை குப்பைகளை  அப்புறப்படுத்துவதற்காக வாடகைக்குத் தர தயாராக இருப்பதாக கூறி உள்ளாட்சி அமைப்பின் இயக்குனருக்கு பிஜு பிரபாகர் ஒரு கடிதம் அனுப்பினார். இந்த முடிவுக்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எந்தக் காரணம் கொண்டும் குப்பை வண்டிகளை ஓட்ட அரசு டிரைவர்கள் முன்வர மாட்டார்கள் என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை