அமெரிக்காவை போல் கனடா அரசியலிலும் இந்தியர்கள் ஆதிக்கம்: நாளை நடக்கும் தேர்தலில் 49 பேர் போட்டி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவை போல் கனடா அரசியலிலும் இந்தியர்கள் ஆதிக்கம்: நாளை நடக்கும் தேர்தலில் 49 பேர் போட்டி

டொரன்டோ: கனடா நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முன்பு இல்லாத வகையில், இம்முறை 49 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், அந்த நாட்டின் அரசியல், ஆட்சி அதிகாரங்களில் கொடிகட்டி பறக்கின்றனர். அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றார். அதேபோல், அந்த நாட்டின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பல முக்கிய பொறுப்புகளில் இந்தியர்களைதான் அதிபர் பைடன் நியமித்து இருக்கிறார். இதேபோல், கனடா நாட்டு அரசியலிலும் இந்தியர்கள் செல்வாக்குடன் உள்ளனர். கனடாவில் கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் தலைமையிலான லிபரல் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும், சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சியை அமைத்தார். இவருடைய பதவிக்காலம் 2023ம் ஆண்டுதான் முடிகிறது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்துள்ளார். இதன்படி, நாளை தேர்தல் நடைபெறுகிறது.   இதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில்   பல்வேறு கட்சிகளின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டிடுகின்றனர்.  கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 16 பேரும், லிபரல் கட்சி சார்பில் 15 பேரும், ஜக்மீத் மிங்கின் புதிய ஜனநாயக கட்சி சார்பில் 12 பேரும், மக்கள் கட்சி சார்பில் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.முன்கூட்டியே தேர்தல் ஏன்?கனடாவில் தற்போது கொரோனா 3வது அலையின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.  மக்களுக்கு தடுப்பூசி போட்டு, இதன் பாதிப்புகளை பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் வெற்றிகரமாக தடுத்துள்ளார். இதனால், மக்களிடையே இவருடைய செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தலை சந்திப்பாக அவருடைய லிபரல் கட்சி கூறி வருகிறது. ஆனால், உண்மையான காரணம் வேறு என்ற தகவலும் உள்ளது. கடந்த தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ள டிருடேவ், ஒவ்வொரு விஷயத்திலும் அக்கட்சிகளுடன் இணைந்துதான் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இதை அவர் விரும்பவில்லை. இதனால்தான், தனித்து பெரும்பான்மை பெறுவதற்காக முன்கூட்டியே தேர்தலை சந்திக்கிறார் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை