யார் புதிய ‘வாத்தியார்’: கும்ளே, லட்சுமணுக்கு வாய்ப்பு | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
யார் புதிய ‘வாத்தியார்’: கும்ளே, லட்சுமணுக்கு வாய்ப்பு | செப்டம்பர் 18, 2021

புதுடில்லி: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கும்ளே அல்லது லட்சுமண் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரது பதவிக் காலம் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியுள்ளது. இப்பதவிக்கு ‘சுழல்’ ஜாம்பவான் அனில் கும்ளே 50, அல்லது வி.வி.எஸ். லட்சுமணை 46, நியமிக்க பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ளேவும், ஐதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லட்சுமணும் உள்ளனர்.

 

மீண்டும் வாய்ப்பு: கடந்த 2016ல் சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு, கும்ளேவை பயிற்சியாளராக நியமித்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி (2017) பைனலில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்வியால், கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே விலகினார். அதன்பின் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ‘டுவென்டி–20’ உலக கோப்பைக்கு பின் இந்திய ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகுகிறார். இந்நிலையில் கும்ளே மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே விலகிய விஷயத்தில் தற்போது திருத்தம் செய்ய வேண்டும். அப்போது கோஹ்லி தந்த அழுத்தம், நெருக்கடியால் தான் விலகினார் என்று அனைவருக்கும் நன்கு தெரியும். இனிமேல் அப்படி நடக்கக்கூடாது. ரவி சாஸ்திரி விலகிய பின், இப்பதவிக்கு கும்ளே அல்லது லட்சுமண் என யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படும்,’’ என்றார்.

ரவி சாஸ்திரி விருப்பம்

பயிற்சியாளர் பதவி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன். ஏனெனில், டெஸ்ட் அரங்கில் 5 ஆண்டுகள் ‘நம்பர்–1’, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, அன்னிய மண்ணில் விளையடிய ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் வெற்றி என, பயிற்சியாளராக நான் சாதிக்க நினைத்த அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன். இதற்கு மேல் எதுவும் இல்லை. அடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையை கைப்பற்றினால் நன்றாக இருக்கும். இப்பயணம் சிறப்பாக அமைந்தது,’’ என்றார்.

மூலக்கதை