விடாது துரத்தும் ஐ.பி.எல்., * சென்னை–மும்பை மீண்டும் மோதல் | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
விடாது துரத்தும் ஐ.பி.எல்., * சென்னை–மும்பை மீண்டும் மோதல் | செப்டம்பர் 18, 2021

துபாய்: ஐ.பி.எல்., தொடர் மீண்டும் துவங்குகிறது. எமிரேட்சில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில், கோல்கட்டா அணியின் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியாருக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து பயிற்சியாளர் பாலாஜி (சென்னை), சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டில்லி) என பலருக்கும் பரவ, தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 

139 நாள்

தற்போது 139 நாட்களுக்குப் பின், 14 வது ஐ.பி.எல்., சீசனின் இரண்டாவது கட்டம் இன்று முதல் எமிரேட்சில் துவங்குகின்றன. மீதமுள்ள 31 போட்டிகளில் துபாயில் 13, சார்ஜாவில் 10, அபுதாபியில் 8 என மூன்று மைதானங்களில் நடக்கவுள்ளன. இன்று துபாயில் நடக்கும் மோதலில் மூன்று முறை சாம்பியன் ஆன தோனியின் சென்னை அணி, ரோகித் சர்மாவின் மும்பையை  எதிர்கொள்கிறது.

துவக்கம் யாரு

சென்னை அணி 7 போட்டியில் 5ல் வென்று 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. அதிக ரன் எடுத்த வீரர்களில் ‘நம்பர்–1’ ஆக உள்ள டுபிளசி (320), தொடையின் பின் பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். எனினும் இது பெரியளவு இல்லை என கூறப்படுகிறது. ஒருவேளை இவர் களமிறங்கவில்லை என்றால் ‘சீனியர்’ ராபின் உத்தப்பா துவக்கம் தரலாம். 

துவக்க வீரர் ருதுராஜ் (196), ‘மிடில் ஆர்டரில்’ மொயீன் அலி (206), ‘கடைக்குட்டி சிங்கம்’ சாம் கர்ரான், ரெய்னா (123), ஜடேஜா (131), அம்பதி ராயுடு (136) என பலரும் திறமை வெளிப்படுத்த உள்ளனர். கேப்டன் தோனி (7 போட்டி, 37 ரன்), இம்முறை முன்னதாக களமிறங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் தர முயற்சிக்கலாம். 

ஷர்துல் எதிர்பார்ப்பு

பந்து வீச்சில் சாம் கர்ரான் (9 விக்.,), தீபக் சகார் (8), ஜடேஜா (6), தவிர மொயீன் அலி (5), லுங்கிடி (5) என பலரும் விக்கெட் வேட்டை நடத்துவது அணிக்கு பலம் தருகிறது. இங்கிலாந்தில் அசத்திய ஷர்துல் தாகூர், பேட்டிங், பவுலிங்கில் கைகொடுக்கலாம். 

ரோகித் பலம்

மும்பை அணி (8 புள்ளி) 7 போட்டியில் 4ல் வென்று பட்டியலில் 4 வதாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா (250 ரன்), சூர்யகுமார் (173), போலார்டு (168) என அனுபவ வீரர்களுடன், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா அசத்தலாம். பந்துவீச்சில் பும்ரா (6 விக்.,), டிரன்ட் பவுல்ட் (8) கூட்டணி மீண்டும் மிரட்டலாம். சுழலில் ராகுல் சகார் (11) கைகொடுக்க காத்திருக்கிறார். 

ரசிகர்களுக்கு அனுமதி

ஐ.பி.எல்., போட்டிகளைக் காண 2019க்குப் பின் மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. எமிரேட்சில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நான்காவது முறை

ஐ.பி.எல்., தொடர் அன்னிய மண்ணில் நடப்பது இது நான்காவது முறை. 

* 2009ல் நடந்த பார்லிமென்ட் தேர்தல் காரணமாக முழு தொடரும் தென் ஆப்ரிக்காவில் நடந்தது.

* 2014ல் பார்லிமென்ட் தேர்தலால், முதல் 20 போட்டிகள் எமிரேட்சில் நடந்தன.

* 2020ல் கொரோனா காரணமாக முழு தொடரும் எமிரேட்சில் நடந்தது.

* தற்போது கொரோனா காரணமாக மீதமுள்ள போட்டிகள் எமிரேட்சில் நடக்கவுள்ளன. 

விலகியது சிக்கல்

சமீபத்தில் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட சிலருக்கு கொரோனா ஏற்பட, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ரத்தானது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, 14வது சீசன் ஐ.பி.எல்., மீண்டும் தடைபடுமோ என அச்சம் ஏற்பட்டது. நல்லவேளையாக எவ்வித சிக்கலும் இன்றி இன்று போட்டி துவங்குகிறது.

மீண்டும் வாய்ப்பு

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அக். 10 வரை இதில் மாற்றம் செய்யலாம் என்பதால், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு முடிந்துவிடவில்லை. இதனால் இளம் வீரர்கள் திறமை வெளிப்படுத்த போராடலாம்.

புது வரவு

ராஜஸ்தான் அணியின் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர், ஐதராபாத்தின் பேர்ஸ்டோவ், கோல்கட்டாவின் கம்மின்ஸ் என பல முன்னணி வீரர்கள் விலகினர். 

இவர்களுக்குப் பதில் மீதமுள்ள போட்டிகளில் டிம் சவுத்தி (கோல்கட்டா), லிவிங்ஸ்டன், எவின் லீவிஸ், ஷம்சி (ராஜஸ்தான்), ஹசரங்கா, டிம் டேவிட் (பெங்களூரு), ஆடம் மில்ன் (மும்பை) களமிறங்க உள்ளனர். 

மூலக்கதை