கோஹ்லி முடிவு...கபில் வியப்பு | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி முடிவு...கபில் வியப்பு | செப்டம்பர் 18, 2021

புதுடில்லி: ‘‘கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுப்பதற்கு முன் தேர்வாளர்கள், பி.சி.சி.ஐ., யிடம் கோஹ்லி பேசி இருக்க வேண்டும்,’’ என கபில் தேவ் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. கடந்த 2019 க்குப் பின் சர்வதேச அரங்கில் களமிறங்கிய 53 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. பணிச்சுமையை குறைக்கும் வகையில் வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியது:

இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே முடிவு எடுத்துக் கொள்கின்றனர். இது சற்று ஆச்சரியமாக உள்ளது. மிகப்பெரிய முடிவு எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட வீரர், தேர்வாளர்கள், இந்திய கிரிக்கெட் போர்டிடம் பேசி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கோஹ்லி சிறந்த வீரர், கேப்டன் என்பதால் இந்நிகழ்வை சற்று வித்தியாசமாக உணர்கிறேன். 

அதேநேரம் கேப்டனாக தொடர விரும்பவில்லை என்ற அவரது நேர்மையான முடிவுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு முன் தோனியும் இப்படித் தான் செய்தார். எது எப்படியோ, வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என முன்பு பி.சி.சி.ஐ., தான் தெரிவிக்கும். தற்காலத்தில் அவர்களாகவே முடிவெடுத்துக் கொள்கின்றனர். கோஹ்லி ஏன் பி.சி.சி.ஐ.,யிடம் ஆலோசிக்கவில்லை என்பதை, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை