ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்: சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் மோதல்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்: சிஎஸ்கே  மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் மோதல்

துபாய்: 13வது ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடந்து வந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக போட்டித்தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. மீதமுள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தப்படுகிறது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 2வது சீசனை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. சென்னை 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. நாளை வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறலாம். இன்னும் 3 போட்டிகளில் வென்றால் பிளேஆப் சுற்றை உறுதி செய்யலாம். 7 போட்டிகளில் 320 ரன் எடுத்துள்ள டூபிளசிஸ் காயம் காரணமாக நாளை ஆடமாட்டார். இதனால் அவருக்கு பதிலாக கெய்க்வாட்டுடன் உத்தப்பா தொடக்க வீரராக களம் இறங்குகிறார். சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, மொயின்அலி, அம்பதி ராயுடு என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.மறுபுறம் மும்பை அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப்கிற்கு முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதியாகும். கேப்டன் ரோகித்சர்மா, டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், பொல்லார்ட், பாண்டியா பிரதர்ஸ் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் போல்ட், பும்ரா வேகத்திலும், ராகுல்சாகர் சுழலிலும் மிரட்டுகின்றனர். கொரோனா காரணமாக இந்தியாவில் போட்டி நடந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் கடந்த மே 1ம் தேதி டெல்லியில் மோதிய போட்டியில் சென்னை நிர்ணயித்த 219 ரன்னை சேசிங் செய்து மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பழிதீர்க்க சென்னை போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\'\'இதுவரை நேருக்கு நேர்...\'\'ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 12ல் சென்னை, 19ல் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வென்றுள்ளது.

மூலக்கதை