ஸ்மார்ட் டிவி சந்தை 65 சதவீத வளர்ச்சி

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் டிவி சந்தை 65 சதவீத வளர்ச்சி

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை கண்டிருப்பதாக, ‘கவுன்டர்பாயின்ட்’ ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டில் 22 லட்சம் ஸ்மார்ட் டிவிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, இது 65 சதவீத வளர்ச்சி ஆகும்.கொரோனா சம்பந்தமான தடைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது, தேவை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களினால் விற்பனை அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட் டிவி அல்லாத டிவிகள் உள்ளிட்ட, அனைத்து வகையான டிவி விற்பனை, இக்காலக்கட்டத்தில் 47 சதவீதம் அதிகரித்து, 27 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில், மக்கள் ஸ்மார்ட் டிவிக்கு விரைவாக மாறி வருகின்றனர். எனவே இது டிவி விற்பனைக்கு மிகவும் ஏற்ற சந்தையாக உள்ளது. கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதை அடுத்து, ஸ்மார்ட் டிவிகளுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

மேலும், தயாரிப்பாளர்களும் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருவதாலும், புதிய புதிய மாடல்கள் வருகை அதிகரித்துள்ளதாலும், விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை