உலக வங்கி பட்டியலில் முறைகேடு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை

தினமலர்  தினமலர்
உலக வங்கி பட்டியலில் முறைகேடு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை

புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என, உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார்.

மேலும், தன் பதவிக் காலத்திலும் அரசாங்கங்களின் அழுத்தங்கள் இருந்ததாகவும்; ஆனால், உலக வங்கி அதற்கு அடிபணியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2017ம் ஆண்டில், தரவரிசை பட்டியலில் சீனாவின் இடத்தை உயர்த்த, சில உயர் வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகார் குறித்த விசாரணைக்குப் பிறகு, உலக வங்கி இனி தரவரிசை பட்டியலை தயாரிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

இது குறித்து, கவுஷிக் பாசு மேலும் கூறியுள்ளதாவது:உலக வங்கியின் தரவரிசை பட்டியல் தயாரிப்பது, 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை என்னுடைய பொறுப்பில் இருந்தது. அப்போதும் அரசாங்கங்களின் அழுத்தம் இருந்தது. ஆனால், நாங்கள் ஒருபோதும் அதற்கு உடன்படவில்லை. இந்நிலை மாறியது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்திய அரசிடமிருந்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இப்போதும் சரி; இதற்கு முன்பும் சரி.இவ்வாறு அவர் ‘டுவிட்டர்’ வாயிலாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை