சென்னை அணிக்கு கோப்பை: பீட்டர்சன் கணிப்பு | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
சென்னை அணிக்கு கோப்பை: பீட்டர்சன் கணிப்பு | செப்டம்பர் 17, 2021

லண்டன்: ‘‘ஐ.பி.எல்., 14வது சீசனில் சென்னை அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது,’’ என, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 17 முதல் அக். 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், டில்லி (12 புள்ளி), சென்னை (10), பெங்களூரு (10), மும்பை (8) அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

 

இம்முறை கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ள அணி குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியது: இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., சீசன் துவங்குவதற்கு முன், சென்னை அணியில் வயதான வீரர்கள் நிறைய உள்ளனர் என்று விமர்சனம் செய்தனர். ஆனால் சென்னை அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். அந்த அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான டுபிளசி, மொயீன் அலி, சாம் கர்ரான் அசத்தினர். இருப்பினும், நான்கு மாத இடைவெளிக்கு பின் இவர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து வரும் நாட்களில் இவர்கள், தங்களது ‘பார்மை’ தொடரும் பட்சத்தில் சென்னை அணி 4வது முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.

 

நடப்பு சாம்பியன் மும்பை அணி, மீண்டும் கோப்பை வெல்ல முதல் போட்டியில் இருந்து வெற்றியை தொடர வேண்டும். ஏனெனில் குறைந்த போட்டிகள் மட்டுமே இருப்பதால், துவக்கத்தில் இரண்டு அல்லது மூன்று தோல்வியை சந்தித்தால் மீண்டு வருவது கடினம்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

 

எமிரேட்சில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்காவின் டுபிளசி, இம்ரான் தாகிர், விண்டீசின் டுவைன் பிராவோ, நேற்று துபாய் வந்தனர். இவர்கள் மூவரும், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று திரும்பியதால், இரண்டு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மூலக்கதை