தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த ‘உலக வங்கி’

தினமலர்  தினமலர்
தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த ‘உலக வங்கி’

புதுடில்லி:‘எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள்’ பட்டியலை, முறைகேடுகள் காரணமாக இனி தயாரிக்கப் போவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீட்டு சூழலின் அடிப்படையில், தொழில் செய்வதற்கு ஏதுவாக எந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தர வரிசையை பட்டியலிடும் பணியை செய்து வந்தது உலக வங்கி.ஆனால், சில நாடுகள் தரவுகள் விஷயத்தில் முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த பட்டியல் தயாரிக்கும் முயற்சியையே கைவிடு வதாக அறிவித்துஉள்ளது உலக வங்கி.

விசாரணை

குறிப்பாக 2017ம் ஆண்டில் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, சீனாவின் உயர்மட்ட வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களால் தவறான தரவுகள் பெறப்பட்டிருப்பது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலக வங்கி தெரிவித்துள்ளதாவது: எளிதாக தொழில் செய்வது குறித்த கடந்த கால மதிப்பீடுகள், தணிக்கை அறிக்கைகள், நிர்வாக இயக்குனர்கள் குழுவின் சார்பாக வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகள் உட்பட, அனைத்து தகவல்களையும் மதிப்பாய்வு செய்த பின், இனி தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

புதிய வழி

மேலும், நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு சூழலை மதிப்பிட, இனி ஒரு புதிய அணுகு முறையில் செயல்பட உள்ளோம். அத்துடன், வணிக சூழல் குறித்த தர வரிசை பட்டியலை தயாரிக்க முனைப்புடன் பணியாற்றிய பல ஊழியர்களின் முயற்சிகளுக்கு, உலக வங்கி நன்றி உடையதாக இருக்கும். இவர்களின் ஆற்றலையும், உழைப்பையும் புதிய வழிகளில் பயன்படுத்த உள்ளோம்.

உலக வங்கி குழுவின் ஆராய்ச்சி என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக நாடுகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவி வருகிறது. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளை மிக துல்லியமாக அளவிடவும் உலக வங்கியின் ஆராய்ச்சி உதவி வருகிறது.இத்தகைய ஆராய்ச்சி அறிக்கை தனியார் துறை, மக்கள் சமூகம், கல்வித் துறை, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவக்கூடிய ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளது. இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தரவு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழவும், அடுத்த ஆண்டுக்கான அறிக்கையை உலக வங்கி நிறுத்திவிட்டது. மேலும், தர வரிசை பட்டியலுக்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் தணிக்கைகள் குறித்த விசாரணையையும் உலக வங்கி துவக்கி உள்ளது.தரவுகள் விஷயத்தில் முறைகேடுகள் நடை பெற்றிருப்பதை கண்டுபிடித்த உலக வங்கி, இனி பட்டியல் தயாரிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது

முன்னேறி வந்த இந்தியா

கடந்த 2020ம் ஆண்டுக்கான, எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தர வரிசை பட்டியலில், இந்தியா 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்துக்கு வந்தது. 2014 – 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா, தர வரிசை பட்டியலில் 79 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 190 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மூலக்கதை