‘ஓலா’வின் ஓஹோ விற்பனை

தினமலர்  தினமலர்
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை

‘ஓலா’வின் ஓஹோ விற்பனை

‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. முதல் நாளில், வினாடிக்கு நான்கு மின்சார ஸ்கூட்டர் என்ற விகிதத்தில், 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘ஓலா எஸ் 1, ஓலா எஸ் 1 புரோ’ எனும் இரு மின்சார ஸ்கூட்டர்களை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

பின்னி எடுக்கும், ‘ பி – நோட்’

‘பி – நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி 97 ஆயிரத்து 744 கோடி ரூபாயாக உள்ளது.இந்திய பங்குச் சந்தைகளில் நேரடியாக தங்களை பதிவு செய்து, முதலீடு செய்ய விரும்பாத அன்னிய முதலீட்டாளர்கள், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்யலாம்.கடந்த ஜூலை இறுதியில், பி – நோட் வாயிலான முதலீடு 85 ஆயிரத்து 799 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களிலும், பி – நோட் வாயிலான முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலுவை தொகை ‘ரெடி’

ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள பாக்கித் தொகையை பெற, ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய ‘ஆன்லைன்’ விண்ணப்பங்களை, டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 9ம் தேதியன்று மத்திய அரசு, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ், நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்காக 56 ஆயிரத்து, 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.எச்.எல்., கட்டண உயர்வு

பன்னாட்டு கொரியர் உள்ளிட்ட சேவையை வழங்கி வரும், ‘டி.எச்.எல்., எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், இந்தியாவில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் சராசரியாக, 6.9 சதவீதம் அளவிலான விலை அதிகரிப்பை மேற்கொள்ள உள்ளது.பணவீக்க மாறுதல், பணத்தின் மதிப்பு, நிர்வாக செலவு உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு, கட்டணத்தை ஆண்டுதோறும் இந்நிறுவனம் நிர்ணயித்து அறிவித்து வருகிறது. இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட நாடுகளில், தன்னுடைய சேவையை வழங்கி வருகிறது.

‘ஐபோன்’ விற்பனை

அண்மையில், ‘ஆப்பிள்’ நிறுவனம், ‘ஐபோன் 13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ்’ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த போன்களை, ‘ரெடிங்டன்’ நிறுவனம் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், நாடு முழுக்க உள்ள கிட்டத்தட்ட 3,500 சில்லரை விற்பனையகங்கள் வாயிலாக, இந்த போன்களை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும் இந்நிறுவனம், இந்தியாவில் எச்.டி.எப்.சி., வங்கியுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சில சலுகைகளையும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை