இந்தியாவில் இன்று ஒரேநாளில் முதல் முறையாக 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை..!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் இன்று ஒரேநாளில் முதல் முறையாக 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை..!!

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டது. இன்று 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை, அதை அடை ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்தது.இந்த நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடிக்கு பிறந்தநாள். அவருக்கு மிகச்சிறந்த பரிசாக அமையும் வகையில் தடுப்பூசி செலுத்தாத உங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள்.இதுதான் பிரதமர் மோடிக்கு சிறந்த பரிசாக அமையும்” எனத் தெரிவித்து இருந்தார். அதற்கான துரித பணிகளில் ஒன்றிய அரசு இறங்கியது. இந்த நிலையில், நாடு முழுவதும் 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 77.24 கோடியைக் கடந்து இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 63,97,972 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, மொத்தம் 77,78,319 முகாம்களில் 77,24,25,744 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.

மூலக்கதை