துணைக் கேப்டனா பும்ரா * இந்திய அணியில் புதிய திருப்பம் | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
துணைக் கேப்டனா பும்ரா * இந்திய அணியில் புதிய திருப்பம் | செப்டம்பர் 17, 2021

புதுடில்லி: இந்திய ‘டுவென்டி–20’ அணி துணைக் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்படலாம்.

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. அதிகமான பணிச்சுமை காரணமாக வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். ‘டுவென்டி–20’ அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

தவிர துணைக் கேப்டன் பதவி யாருக்கு என்பதில் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் முன்னணியில் உள்ளார். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்த இவர் தற்போது ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி கேப்டனாக செயல்படுகிறார். 2017/18 சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் டில்லி அணியை பைனலுக்கு கொண்டு சென்றார்.

தவிர பஞ்சாப் அணி கேப்டனாக இருக்கும் லோகேஷ் ராகுலும் இந்த போட்டியில் உள்ளார். 2020ல் நியூசிலாந்து மண்ணில் கோஹ்லி, ரோகித் இல்லாத நிலையில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். தவிர ஆஸ்திரேலிய தொடரில் கோஹ்லிக்கு துணைக் கேப்டனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

ரிஷாப் பன்ட், ராகுல் உடன் பும்ராவும் துணைக் கேப்டன் பந்தயத்தில் உள்ளார். இவர் எந்த அணிக்கும் கேப்டனாக இருந்தது இல்லை. இருப்பினும் இந்தியாவின் மூன்று வித அணியின் பந்துவீச்சிற்கும் தலைமை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘துணைக் கேப்டனாவதில் ரிஷாப் பன்ட் முன்னிலையில் உள்ளார். ராகுல் பெயரையும் இதில் மறுக்க முடியாது. இவர்களுடன் பும்ராவும் போட்டியில் உள்ளார்,’’ என்றார்.

உலக கோப்பை தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் 2 டெஸ்ட், 3 ‘டுவென்டி–20’ ல் விளையாட வருகிறது. அப்போது துணைக் கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

மூலக்கதை