பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: பாகிஸ்தான்நியூசிலாந்து தொடர் ரத்து

ராவல்பிண்டி: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள  நியூசிலாந்து அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட ஒரு நாள் தொடரிலும், 5 ஆட்டங்களை கொண்டி டி20 தொடரிலும் விளையாட இருந்தது.  இதில் ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும், டி20 ஆட்டங்களும் லாகூரிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு ராவல்பிண்டியில் தொடங்குவதாக இருந்தது. இரண்டு அணி வீரர்களும் களமிறங்க தயாராக இருந்தனர். ஆட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தொடரும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தானில் விளையாட உள்ள நியூசி வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்  இருப்பதாக நியூசிலாந்து அரசின் புலனாய்வு பிரிவுக்கு தகவல்  கிடைத்துள்ளது. அந்த தகவல் உடனடியாக நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்புக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசி  நியூசிலாந்து நிர்வாகிகள் தொடரை ரத்து செய்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில், ‘நியூசிலாந்து அணிக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் திருப்தி அடைத்துள்ளனர். நாங்கள் திட்டமிட்டபடி போட்டியை தொடர தயாராக இருக்கிறோம். இந்த திடீர் ரத்தால் பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் வைட், ‘எங்கள் புலனாய்வு துறையிடம் இருந்த தகவல் அடிப்படையில்  சுற்றுப்பயணத்தை தொடர முடியாது. இந்த திடீர் ரத்து, போட்டியை ஏற்பாடு செய்த பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதை மறுக்கவில்லை. அதை விட எங்கள் வீரர்களின் பாதுகாப்பு முக்கியமானது. ’ என்று கூறியுள்ளார். பாக்.பிரதமர்  இம்ரான் கான் தனது பழைய நியூசிலாந்து நண்பர்களிடம் பேசியும் பலனில்லை. நியூசிலாந்து அணி 2003ம் ஆண்டுக்கு பிறகு  இப்போதுதான் பாகிஸ்தான் சென்றது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து தொடரும்...இங்கிாலந்து அணி  16 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளது. அங்கு அக்.13, 14 தேதிகளில்  2 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர், ‘ பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகும் நியூசிலாந்து முடிவை புரிந்துக் கொள்கிறோம்.     எங்கள் சுற்றுப்பயணம் குறித்து, பாகிஸ்தானில் உள்ள எங்கள் பாதுகாப்பு குழுவுடன் தொடர்பு கொள்கிறோம். அதன் பிறகு எங்கள் முடிவை இன்னும் 24 முதல் 48 மணி நேரத்தில்  அறிவிப்போம்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை