ஸ்மித் மீண்டும் கேப்டன்?...மார்க் டெய்லர் யோசனை

தினகரன்  தினகரன்
ஸ்மித் மீண்டும் கேப்டன்?...மார்க் டெய்லர் யோசனை

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக   டிம் பெய்ன்,  ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் டிம் பெய்னுக்கு சில நாட்களுக்கு முன்பு  கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.  தான் நலமுடன் இருப்பதாக டிம்  தெரிவித்துள்ளார். ஆனால் குறைந்தது 6 வாரங்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள  இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர்,  தொடங்குவதற்குள் டிம் முழுமையாக குணமடைந்து விடுவார். ஆனாலும்  ஆஸி டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை  நியமிப்பது குறித்து இப்போது பேச்சுகள் எழுந்துள்ளன. முன்னாள் வீரர்கள்  பலரும்‘ஸ்டீவன் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம்’ என்று பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர்  வெளிப்படையாக, ‘ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக்கும் வாய்ப்பை நான் நிராகரிக்க மாட்டேன். மேலும் 2018ல் தென் ஆப்ரிக்காவில் என்ன நடந்தது எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு பல ஆண்டுகள் ஓடிவிட்டன. சூழலும் மாறியுள்ளது. எனவே  ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம். டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பேட் கம்மின்சும் இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். மொத்தத்தில்  ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன்களை நியமிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன’ என்று கூறியுள்ளார். ஸ்மித் 2018ம் ஆண்டு பந்து சேதப்படுத்திய விவகாரத்தினால், அவருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனால் கேப்டனாக இருந்த ஸ்மித்துக்கு பதில் டிம் பெய்ன் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஸ்மித் 2014 முதல் 2018ம் ஆண்டு வரை  34 டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருந்து 18வெற்றி, 10 தோல்வி, 6டிரா என 52.94சதவீத வெற்றியை வசப்படுத்தியுள்ளார். டிம் பெயின் 2018 முதல்  2021 வரை 23 டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருந்து 11 வெற்றி, 8 தோல்வி, 4 டிரா என 47.83சதவீத வெற்றியை பெற்றுள்ளார். எனவே  விளையாடாமல், வாயாடி எதிரணியை வம்புக்கு இழுத்து வெற்றி பெற நினைக்கும் டிம் பெயினின்,  அறுவை சிகிச்சையை காரணம் காட்டி,  ஆஸி டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படும் வாய்ப்பு   உள்ளது.

மூலக்கதை