டேவிஸ் கோப்பை டென்னிஸ்: முதல் போட்டியில் பிரஜ்னேஷ்-ஒட்டோ விர்டாநென் மோதல்

தினகரன்  தினகரன்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: முதல் போட்டியில் பிரஜ்னேஷ்ஒட்டோ விர்டாநென் மோதல்

எஸ்போ(பின்லாந்து): இந்தியா-பின்லாந்து இடையேயான வேர்ல்டு குரூப் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், பின்லாந்தின் ஒட்டோ விர்டாநென்னை எதிர்கொள்கிறார். நடப்பாண்டின் டேவிஸ் கோப்பை டென்னிசில் வேர்ல்டு குரூப் முதல் ரவுண்ட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன.உலக குரூப்பில் இந்தியா தனது முதலாவது ரவுண்டில் பின்லாந்துடன் மோதுகிறது. பின்லாந்தின் எஸ்போ நகரில் நகரில் உள்ள உள்ளரங்கு டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு துவங்கும் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரனும், ஒட்டோ விர்டாநென்னும் மோதுகின்றனர். மற்றொரு போட்டியில் ராம்குமார் ராமநாதனை எதிர்த்து எமில் ரூசுவோரி மோதுகிறார். சர்வதேச ஒற்றையர் தரவரிசையில் பிரஜ்னேஷ் 165வது இடத்திலும், ஒட்டோ விர்டாநென் 419வது இடத்திலும் உள்ளனர். ராம்குமார் ராமநாதன் தரவரிசையில் 187ம் இடத்திலும், அவருடன் இன்று மோதும் எமில் ரூசுவோரி 74ம் இடத்திலும் உள்ளனர். நாளை நடைபெறும் இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடி ரோஹன் போபண்ணா-டிவிஜ் சரணை எதிர்த்து, பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா-ஹென்றி கோன்டிநென் ஜோடி களமிறங்குகிறது. இப்போட்டியை தொடர்ந்து 2 மாற்று ஒற்றையர் போட்டிகளும் நாளை நடைபெறவுள்ளன.போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரஜ்னேஷ் கூறுகையில், ‘‘பின்லாந்தின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி, வலுவான அணியாகவே கருதப்படுகிறது. சிறந்த வீரர்களுக்கு எதிரான போட்டிகளில் நான் வெற்றிகளும் பெற்றுள்ளேன். தோல்விகளும் பெற்றுள்ளேன். அது அந்த நாளில் என்னுடைய ஆட்டத்தை பொறுத்தது. நாட்டுக்காக ஆடும் போது சிறிது பதற்றம் இருப்பது இயல்புதான். பதற்றமில்லாமல் நிதானமாக ஆட வேண்டும் என்ற அணுகுமுறையுடன் ஆடப் போகிறேன்’’ என்றார்.

மூலக்கதை