மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 2 கோடி தடுப்பூசி இலக்கு: காங்கிரஸ் ‘வேலையின்மை தினம்’ கடைபிடிப்பு

தினகரன்  தினகரன்
மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 2 கோடி தடுப்பூசி இலக்கு: காங்கிரஸ் ‘வேலையின்மை தினம்’ கடைபிடிப்பு

புதுடெல்லி: இன்று மோடியின் பிறந்த நாள் என்பதால் ஒரே நாளில் 2 கோடி டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேசிய வேலையின்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு இன்று 71வது பிறந்த நாள் என்பதால், இன்று முதல் ‘சேவையும் அர்ப்பணிப்பும்’ என்ற தலைப்பில் அடுத்த 20 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது. வரும் அக்டோபர் 7ம் தேதியுடன் பிரதமராகவும், முதல்வராகவும் தனது அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் மோடி பதவி வகித்துள்ளார். அதனால், 20 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடி பிறந்த நாளான இன்று ‘தேசிய வேலையின்மை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய வேலையின்மை தினம் இன்று கடைபிடிக்கப்படும். மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று வரை வேலைவாய்ப்பு பிரச்னையில் மவுனம் காத்து வருகிறது. நாட்டின் வேலையின்மை விகிதம் ஒரு ஆண்டில் 2.4 சதவீதத்திலிருந்து 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோடியின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஒன்றிய சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 77.15 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரு நாளில் சுமார் ஒரு கோடி டோஸ் இரண்டு முறை போடப்பட்டுள்ளது. இன்று, அதனை முறியடிக்கும் விதமாக இரண்டு கோடி இலக்கு நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 18 நாடுகள் தினமும் 81.7 லட்சம் டோஸ் மட்டுமே போடுகின்றன. இந்தியா மட்டும் தினமும் 85.4 லட்சம் டோஸ் தடுப்பூசியை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் பிறந்த நாளுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இன்று தனது 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தாயை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதற்காக பிரதமர் மோடி குஜராத் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை