நாடு முழுவதும் எதிரொலித்த தந்தை பெரியாரின் பெயர் :#socialjusticeday #HBDthanthaiperiyar ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டிங்!!

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் எதிரொலித்த தந்தை பெரியாரின் பெயர் :#socialjusticeday #HBDthanthaiperiyar ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டிங்!!

சென்னை : தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, இன்று தமிழகத்தில் சமூக நீதி நாள் கொண்டாடப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.இதனிடையே அரசியல் தலைவர்கள் பெரியாரை நினைவுக் கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பெரியாரின் பிறந்தநாளையொட்டி #socialjusticeday #HBDthanthaiperiyar போன்ற ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இன்று பெரியார் பெயர் எதிரொலித்திருக்கிறது.இந்த நிலையில், பெரியாரின் பிறந்தநாள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாகத் தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.அது போல  ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ சுதந்திரம், தைரியம், சமத்துவம் என்ற பெரியாரின் கருத்துகளை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்” என பதிவிட்டு “ எந்த ஒரு கருத்தினையும் மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அந்த வெளிப்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “செல்வக் குடும்பத்தில் பிறந்து, வளமான வாழ்வைத் துறந்து, வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டிகளுக்கெல்லாம் பரப்பியவரும், மூட நம்பிக்கைகளை அற்று போகச் செய்தவரும், சமூக நீதிக்காக குரல் கொடுத்தவரும்,தமிழ்நாட்டு மக்களால் “பெரியார்” என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான பகுத்தறிவுப் பகலவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பிறந்த நாளான இன்று, அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதிச் சழக்குகளுக்கும் மதவெறிக்கும் எதிராக ஒரு கருத்து நூறு ஆண்டுகளைத் தாண்டி ஊறு படாமல் நிற்கிறதெனில் அந்தக் கருத்தின் பெயர் பெரியார். ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்தோடு நினைவு கூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை