கோஹ்லி பதவி விலகியது ஏன் | செப்டம்பர் 16, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி பதவி விலகியது ஏன் | செப்டம்பர் 16, 2021

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்கு ஒருமாதம் உள்ள நிலையில் திடீரென கோஹ்லி, பதவி விலகியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கான சில காரணங்கள்.

* இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணிக்கு இரண்டு துணைக் கேப்டன்கள் நியமிக்க வேண்டும் என கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்ததால், கோஹ்லி பதவி விலகும் முடிவை எடுத்திருக்கலாம்.

* பொதுவாக பணிச்சுமை காரணமாக அதிக ‘டுவென்டி–20’ ல் கோஹ்லி பங்கேற்பதில்லை. இவர் கேப்டனான பின் இந்தியா பங்கேற்ற 67 ‘டுவென்டி–20’ போட்டிகளில் 45ல் தான் விளையாடினார். 

* 2020க்குப் பின் டெஸ்டில் கோஹ்லியின் ரன் சராசரி 26.80 ஆக குறைந்து விட்டது. 

* 2019க்குப் பின் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து களமிறங்கிய 53 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

* கடந்த ஆண்டு மும்பை அணி 5வது ஐ.பி.எல்., கோப்பை வென்றது. இதனால் ‘டுவென்டி–20’ அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. 

* ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்காக பல ஆண்டு கேப்டனாக இருந்த போதும் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. இவர் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்பிர் சர்ச்சை கிளப்பினார்.

 

பறிபோகும் ‘ஒருநாள்’

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின் பதவி விலகும் கோஹ்லி, டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக தொடர உள்ளார். இருப்பினும் வரும் உலக கோப்பை தொடரில் கோஹ்லி கோப்பை வெல்லவில்லை என்றால், ஒருநாள் அணி கேப்டன் பதவியும் பறிபோகலாம்.

 

27 

கடந்த 2017ல் தோனி விலகிய பின் கோஹ்லி, ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஆனார். 45 போட்டிகளில் கேப்டனாக 12 அரைசதம் உட்பட 1502 ரன் எடுத்த இவர்,  ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் ஆனார்.

* சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிவேகமாக 1000 ரன் எடுத்த முதல் கேப்டன் கோஹ்லி. 

* சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர்களில் கோஹ்லி (90 போட்டி, 3159 ரன், சராசரி 52.65) ‘நம்பர்–1’ ஆக நீடிக்கிறார். 


கேப்டனாக செயல்பாடு...

போட்டி வெற்றி தோல்வி ‘டை’ முடிவில்லை

‘டுவென்டி–20’ 45 27 14 2 2

ஒருநாள் 95 65 27 1 2

* டெஸ்டில் 65 போட்டிக்கு கேப்டனாக இருந்து 38ல் வெற்றி பெற்றுத் தந்தார். 11 போட்டி ‘டிரா’ ஆனது (16 தோல்வி). 


தோனி காரணமா

மூன்று வித கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக கோஹ்லி செயல்பட்டாலும், இதுவரை ஒரு ஐ.சி.சி., கோப்பை கூட வெல்லவில்லை. இதனால் வரும் உலக கோப்பை தொடருக்கு முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் அணித் தேர்வு உட்பட பல்வேறு விஷங்களில் தலையிடலாம். கோஹ்லி பதவி விலக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

மூலக்கதை