தீர்ப்பாயங்களில் வேண்டப்பட்டவர்களை மட்டும் நீதிபதிகளாக நியமித்து கொள்வதா? : மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!

தினகரன்  தினகரன்
தீர்ப்பாயங்களில் வேண்டப்பட்டவர்களை மட்டும் நீதிபதிகளாக நியமித்து கொள்வதா? : மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!

புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பணியில்  நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டது. இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், 4 ஆண்டாக பணிக்காலத்தை குறைத்து ஒன்றிய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தது. எனவே தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு பணிக்காலம் எதையும் நிர்ணயிக்கக் கூடாது என சென்னை பார் அசோசியேஷன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை’ என கேள்வியெழுப்பிய நீதிமன்றம், அடுத்தடுத்து அதற்கான கால அவகாசமும் ஒன்றிய அரசுக்கு வழங்கியது. இதனிடையே மேற்கண்ட  வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் மீது ஒன்றிய அரசுக்கு மரியாதையே இல்லை. நாங்கள் வழங்கும் தீர்ப்பையும் மதிப்பதில்லை. எங்களது பொறுமையை நீங்கள் சோதிக்க வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சந்திரசூட் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த தலைமை நீதிபதி ரமணா, “தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேர்வுக்குழு பலரின் பெயர்களைப் பரிந்துரைதுள்ளது. அதில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மற்றவர்களைக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது. என் தலைமையிலான தேர்வுக்குழு10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதிபதிகளைத் தேர்வுசெய்து பரிந்துரைத்தது.அதில் 3 பேரை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. சட்டத்துறையில் தேர்வுக்குழுப் பட்டியலை புறக்கணிக்கவும், காத்திருப்பில் வைக்கவும் முடியாது. எந்த அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கிறது” என்று கேட்டார். அதேபோல நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தலைமைப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. ஒரு வங்கி கடன் செலுத்தாத வாடிக்கையாளரின் வீட்டையோ அல்லது தொழிற்சாலையையோ ஜப்தி செய்ய முயன்றால், தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்க யாருமில்லை. உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை விசாரிக்க மறுக்கிறது. நீதி கிடைக்க வழியில்லை” என்றார் காட்டமாக.இதற்குப் பிறகு உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, “உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான தேர்வுக் குழு தீர்ப்பாயங்களுக்குத் தலைமைப் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. இதனால் எங்களுக்கு நேரம் வீணாகியுள்ளது. ஆகவே அடுத்த 2 வாரங்களுக்குள் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். அடுத்த விசாரணைக்கு வரும்போது நியமன ஆணைகளோடு வாருங்கள். இல்லையெனில் நியமிக்கப்படாததற்கான காரணத்தோடு வாருங்கள்” என்றனர்.

மூலக்கதை