3200 ஆண்டுகள் பழமையான பொருநை நாகரீகம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
3200 ஆண்டுகள் பழமையான பொருநை நாகரீகம்

3,200 ஆண்டுகள் பழமையான பொருநை நாகரிகம்

தமிழக அரசின் ஒத்துழைப்போடு நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகளால்  பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகின் பழமையான ஆற்றங்கரை நாகரிகங்களான சிந்து சமவெளி, மெசபத்தாமியா,நைல் நாகரிகம் போன்று பழமையான நாகரிகமாக அறியப்பட்டுள்ளது தமிழகத்தின் பொருநை ஆற்றங்கரை நாகரிகம்.ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள அகழாய்வுகள் இதனை அறிவிக்கின்றன.

ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு முதன்முறையாக அகழாய்வு நடைபெற்றது. அதன் பிறகு 1903,1904 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.ஆதிச்சநல்லூர் பறம்பு பகுதி ஈமத்தாழிகள் பகுதியாக இருந்தது. மேலும் தொல்பொருட்கள் கண்டறியப்படும் வற்றாத தொல்பொருள் பகுதியாகவும் உள்ளது.  ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் போன்று பெண் உருவங்கள் கிடைத்தன. மேலும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 847 தொல்பொருட்கள் மூலம் இம்மக்களின் பழமையான வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. தமிழி, குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ள பானைகள் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தொடக்க வரலாற்று காலத்தைச் சார்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகளை,தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ளது.இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உமி நீங்கி இருந்த நெல்மணிகள் அமெரிக்காவின் Beta Analytic ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு கி.மு 1155 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவை என அறியப்பட்டது.

கொற்கைப்பகுதி  மக்கள் மேல் மற்றும் கீழ்ப்பகுதி நாட்டு மக்களிடம் கிமு 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அப்குதியில் நடந்த அகழாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆதிச்சநல்லூர் சிவகளை,கொற்கை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்த பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என்பது நெல்மணி ஆய்வின் மூலமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.   தமிழக அரசின் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு தமிழர் நாகரிகப் பெருமையினை பறைசாற்றும் வகையில் பொருநை அருங்காட்சியகமும் அமையவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

மூலக்கதை