இந்த தீபாவளிக்கும் பட்டாசு இல்லையா!: தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை விதித்தது கெஜ்ரிவால் அரசு..!!

தினகரன்  தினகரன்
இந்த தீபாவளிக்கும் பட்டாசு இல்லையா!: தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை விதித்தது கெஜ்ரிவால் அரசு..!!

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்‍கவும் முழுவதுமாக தடை விதிக்‍கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு. பெரியோர் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாகவே தீபாவளி பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்‍க கெஜ்ரிவால் அரசு தடை விதித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது டெல்லி வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது. ஆனால் டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், தீபாவளியின் போது டெல்லியில் மாசு மிகவும் அதிகரிப்பதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும். கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால், இந்தாண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். டெல்லி அரசின் இத்தகைய அறிவிப்பு பட்டாசு தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள சிவகாசி பட்டாசு தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

மூலக்கதை