துபாயில் ஐ.பி.எல்., ஏலம் * புதிய அணிகளுக்கான... | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
துபாயில் ஐ.பி.எல்., ஏலம் * புதிய அணிகளுக்கான... | செப்டம்பர் 14, 2021

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவுள்ள புதிய அணிகளை தேர்வு செய்வதற்கான ஏலம் துபாயில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர், 2008 முதல் நடக்கிறது. சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு முதல் அணிகள் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது. 

ஆமதாபாத், புனே, லக்னோ என்ற அடிப்படையில் அணிகள் செயல்படலாம். இதில், ஆமதாபாத்தில் உலகின் பெரிய மோடி மைதானம், லக்னோவில் பிரமாண்ட எகானா மைதானம் இருப்பதால், இவ்விரு நகரங்களுக்கு வாய்ப்பு அதிகம். புதிய அணி அடிப்படை ஏலத் தொகையாக ரூ. 2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ரூ.10 லட்சம் செலுத்தி அக். 5 வரை விண்ணப்பம் பெறலாம். 

எப்போது, எப்படி

புதிய அணியை தேர்வு செய்வற்கான ஏலம் வரும் அக். 17ல் இணையதளம் வழியாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்துள்ளனர். ஐ.பி.எல்., முடிந்து அடுத்த 2 வது நாள், துபாயில் நேரடியாக ஏலம் நடக்க உள்ளது. அன்றைய தினம் மூடப்பட்ட டெண்டர்கள் அனைவர் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, புதிய அணிகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம். 

பி.சி.சி.ஐ., தரப்பில் வெளியான அறிக்கை:

ஐ.பி.எல்., தொடரில் 2022 முதல் இரு புதிய அணிகளை அறிமுகம் செய்ய, கட்டுப்பாட்டு குழு முடிவு செய்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஏலத் தொகையை முடிவு செய்து சமர்ப்பிக்கலாம். டெண்டரில் குறிப்பிட்ட விதிமுறைகள், நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெறுவர். மற்றபடி டெண்டர் படிவம் பெற்று விட்டால் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியாது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆர்வம் யாருக்கு

ஆண்டுக்கு ரூ. 3000 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். தவிர மூன்று நிறுவனங்கள் சேர்ந்து குழுவாகவும் விண்ணப்பிக்கலாம். புதிய அணிகளை வாங்க அதானி குழுமம், ஆர்பிஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், பிரபல மருந்தக நிறுவனம், வங்கி சேவை நிறுவனரும் ஆர்வமாக உள்ளனர். 

மூலக்கதை