நுாற்றாண்டின் சிறந்த பவுலர் பும்ரா * பாராட்டுகிறார் பாலாஜி | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
நுாற்றாண்டின் சிறந்த பவுலர் பும்ரா * பாராட்டுகிறார் பாலாஜி | செப்டம்பர் 14, 2021

துபாய்: ‘‘நுாற்றாண்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,’’ என, பாலாஜி தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4 போட்டியில் 18 விக்கெட்டுகள் சாய்த்தார். ஓவலில் நடந்த நான்காவது டெஸ்டில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதும், இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக களமிறங்க உள்ளார்.

இவர் குறித்து இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர், தமிழகத்தின் பாலாஜி கூறியது:

டெஸ்ட் அரங்கில் பும்ரா சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளார். எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பார். ஒருநாள், ‘டுவென்டி–20’ மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப இவர் தன்னை மாற்றிக் கொள்வது வியக்க வைக்கிறது. ஏனெனில் மூன்றும் வெவ்வேறு வித கிரிக்கெட். இதில் தொடர்ந்து சிறப்பான ‘பார்மில்’ இருப்பது மிக அபூர்வமானது. 

மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன், பவுலர்கள் ஒருசிலர் தான் இருப்பர். அந்த வகையில் பும்ராவை பொறுத்தவரையில் ஒரு தலைமுறையின் சிறந்த பவுலராக திகழ்கிறார். இவரைப் போல வேறு வீரர்களை காண்பது எளிதல்ல. பும்ரா, முகமது ஷமி என திறமையான பவுலர்கள் நமக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் தான். 

மற்ற பவுலர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் பும்ரா. திறமையான பவுலர் மட்டுமன்றி, தலைமைப் பண்பும் உள்ளது. இளம் வயதில் பவுலிங் பிரிவுக்கு பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை