நீல நிற ஜெர்சியில் பெங்களூரு | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
நீல நிற ஜெர்சியில் பெங்களூரு | செப்டம்பர் 14, 2021

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி நீல நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

இந்தியாவில் நடந்த 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ரத்தானது. இதன் மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் செப். 19ல் துவங்க உள்ளன. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி பங்கேற்ற 7 போட்டியில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளியுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இம்முறை தனது 8வது போட்டியில் (செப். 20) கோல்கட்டா அணியை சந்திக்கவுள்ளது. கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க போராடும் இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், இப்போட்டியின் போது பெங்களூரு அணி வீரர்கள் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர். 

கடந்த மே மாதம் இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற, பி.பி.இ., உடை அணிந்து போராடும் முன்கள பணியாளர்களின் விலைமதிப்பில்லாத சேவையை கவுரவிக்கும் வகையில், கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. 

மூலக்கதை