சென்னையில் செப். 29 முதல் மாநில நீச்சல் போட்டி

தினகரன்  தினகரன்
சென்னையில் செப். 29 முதல் மாநில நீச்சல் போட்டி

சென்னை: மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சென்னையில் செப் 29ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 37வது சப்ஜூனியர், 47வது ஜூனியர் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர், மகளிருக்கான இந்தப் போட்டிகள்  சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில்  செப்.29ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை நடைபெறும்.இதில் தேர்வு பெறுபவர்கள்  தமிழ்நாடு சார்பில், அக்.19ம் தேதி முதல் அக்.23ம் தேதி வரை பெங்களூரு, பசவன்குடியில் நடக்க உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். சீனியர் பிரிவினருக்கான 75வது மாநில நீச்சல் போட்டிகள் அக்.2, 3  தேதிகளில் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலேயே நடக்கும். இதில் தேர்வு பெறும் வீரர்கள் அக்.26 முதல் 29ம் தேதி வரை பெங்களூருவில்  நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பர். மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் மொத்தம் 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மூலக்கதை