கேரளாவில் அச்சடித்து வினியோகம் சென்னை கள்ளநோட்டு கும்பல் தலைவி கைது: தமிழகத்திலும் புழக்கத்தில் விட்டது அம்பலம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் அச்சடித்து வினியோகம் சென்னை கள்ளநோட்டு கும்பல் தலைவி கைது: தமிழகத்திலும் புழக்கத்தில் விட்டது அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து தமிழ்நாட்டில் புழக்கத்தில் விட்டு வந்த சென்னையை சேர்ந்த கள்ளநோட்டு கும்பல் தலைவியை கொச்சி போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதாக தீவிரவாத தடுப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை 27ம் தேதி தீவிரவாத தடுப்பு படையினரும், கொச்சி போலீசாரும் சம்மந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், அங்கிருந்த ரூ.7 லட்சத்துக்கான 500  ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை அதிரடியாக  கைது செய்தனர். விசாரணையில், இந்த கும்பலிடம் இருந்து கள்ள நோட்டுகளை சென்னை ஆவடியை சேர்ந்த லட்சுமி (48) வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் லட்சுமியை பிடிக்க சென்னை விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்துகொண்ட லட்சுமி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடி வந்தனர். அப்போது அந்த பெண் கேரள எல்லையான குமுளியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் குமுளிக்கு சென்று லட்சுமியை கைது செய்தனர். லட்சுமி தான் கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இவருக்கு சென்னையில் உள்ள கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை