அடுத்தவாரம் அமெரிக்கா பயணம் குவாட் மாநாடு, ஐ.நா கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு: ஜோ பைடனுடன் தனியாக பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
அடுத்தவாரம் அமெரிக்கா பயணம் குவாட் மாநாடு, ஐ.நா கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு: ஜோ பைடனுடன் தனியாக பேச்சுவார்த்தை

புதுடெல்லி: குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா சபை கூட்டத்தில் பேசுவதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்தவாரம் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அப்போது தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு: குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பு சார்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் செப்.24ம் தேதி மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி முயற்சி முன்னெடுப்பு, கட்டுப்பாடற்ற இந்தோ-பசிபிக் பிராந்தியம், தொழில்நுட்ப வளர்ச்சி, நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தல் ஆகியன குறித்து விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மறுநாள் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா சபையின் 76வது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில், ‘கொரோனாவில் இருந்து நம்பிக்கையோடு மீள்வதற்கான எதிர்ப்புதிறனை கட்டமைப்போம்’, ‘நீடிப்புதிறன் புனர்கட்டமைப்பு’, ‘மக்களின் உரிமைக்கு மதிப்பளித்தல்’, ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு புத்துயிர் அளித்தல்’ ஆகிய பொது கருப்பொருள் மீது விவாதம் நடக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதால், அதிபர் ஜோபைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் அளித்த விருந்தில் பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் இரண்டு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்ற பிரதமர் மோடி, இந்தாண்டு மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. * சீனா எதிர்ப்புஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் குவாட் உச்சிமாநாட்டுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோஹோ லிஜியான் கூறுகையில், சுயநலத்துடன் சில நாடுகள் கூடி மற்ற நாடுகளை கொள்கையடிப்படையில் தாக்குவதால் புகழ் அடைந்துவிட முடியாது. அதனால் எதிர்காலமும் கிடைக்காது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா இன்ஜின் போன்றது. மேலும் அமைதியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாகவும் அமைந்துள்ளது. ஆனால் அண்டை நாடுகள் குறுகிய எண்ணத்துடன் பனிப்போர் நடத்தி வருகிறார்கள். குவாட் மாநாட்டில் கட்டுப்பாடற்ற ஆசிய பசிபிக் பிராந்தியம் என்ற விவாதம் நடைபெறுவதை கொள்கை அடிப்படையில் சீனா எதிர்க்கிறது. தென்சீன கடல்பகுதியில் 1.3 மில்லியன் சதுரமைல் எல்லை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.* 100 உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்நியூயார்க்கில் செப்.25ம் தேதி நடக்கும் ஐ.நா. பொதுசபையில் பேசுபவர்கள் குறித்த 2வது பட்டியல் படி, 109 நாட்டு தலைவர்கள் நேரடியாக கருப்பொருள் மீது விவாதிக்கின்றனர். 60 பேர் ஏற்கனவே பேசி பதிவு செய்த வீடியோவை அனுப்பிவைக்க இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.பொது சபையில் பேசுகிறார். செப்.21 முதல் 27 வரை நடக்கும் இந்த விவாதத்தில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதி கடைசி நாளில் பங்கேற்று பேசுகிறார். அதே போன்று மியான்மர், குனியா நாட்டு பிரதிநிதிகள் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொள்கின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, இஸ்ரேல் புதிய பிரதமர் நப்டாலி பென்னட், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் நேரில் பங்கேற்று விவாதத்தில் பேசுகின்றனர். மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாஹித் இந்த முழு கூட்டத்தொடரின் தலைவராக இருப்பார் என்று ஐ.நா. பொதுசெயலாளர் அந்தோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். * கம்பி எண்ணும் கொள்ளையர்உ.பி. அலிகாரில் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், 2017ம் ஆண்டுக்கு முன்பு உ.பி. ஆட்சியை கொள்ளை கும்பல் நடத்தி வந்தது. தற்போது நிலைமை மாறிவிட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அந்த கொள்ளை கும்பல் மாபியா கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு நலத்திட்டங்களை அமல்படுத்தமுடியாத படி முன்பு தடைகற்கள் இருந்தன. தற்போது அதுபோன்று தடையேதும் இல்லை. ஏழை எளியவர்களுக்கு அரசு திட்டங்கள் தாராளமாக கிடைக்கிறது. இந்தியா ராணுவ தளவாட கருவிகளை முன்பு இறக்குமதி செய்து வந்தது. தற்போது ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. நமது உள்நாட்டு தயாரிப்புகளான நவீன குண்டுகள், துப்பாக்கிகள், போர்விமானங்கள், டிரோன், போர்க்கப்பல் ஆகியவற்றை உலகமே வியந்து பார்க்கிறது என்று பேசினார்.

மூலக்கதை