20 மாதத்திற்கு பிறகு நேரடி சந்திப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மறுதினம் கூடுகிறது

தினகரன்  தினகரன்
20 மாதத்திற்கு பிறகு நேரடி சந்திப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மறுதினம் கூடுகிறது

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 20 மாதங்களுக்கு பிறகு நேரடியாக லக்னோவில் நாளை மறுதினம் கூடுகிறது. பல்வேறு வரி முறைகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதில், 5, 12, 18, 28 சதவீதம் என 4 பிரிவாக வரி விதிக்கப்படுகிறது. வரி விதிப்பில் மாற்றம் செய்வது மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசு பிரதிநிதிகள் இணைந்து முடிவு எடுக்கின்றனர். கடைசியாக கடந்த ஜூன் 12ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.இந்நிலையில், 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 20 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக மட்டுமே நடந்து வந்தது. கடந்த 2019 டிசம்பர் 18க்குப் பிறகு, முதல் முறையாக இம்முறை லக்னோவில் நேரடி கூட்டம் நடத்தப்பட உள்ளது.கடந்த கூட்டத்தில் கொரோனா மருந்து மற்றும் உபகரணங்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகும் தொடர்வது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதோடு நீண்ட கால எதிர்பார்ப்பான பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக இம்முறை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டி உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ கடந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை