பதவி எப்போது பறிபோகுமோ என பாஜ முதல்வர்கள் பயத்தில் உள்ளனர்: நிதின் கட்கரி பேச்சு

தினகரன்  தினகரன்
பதவி எப்போது பறிபோகுமோ என பாஜ முதல்வர்கள் பயத்தில் உள்ளனர்: நிதின் கட்கரி பேச்சு

ஜெய்ப்பூர்: ‘பதவியிலிருந்து எப்போது தூக்கப்படுவோமோ என்ற பயத்தில் மாநில முதல்வர்கள் உள்ளனர்’ என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது வைரலாகி உள்ளது. கடந்த 6 மாதத்தில் பாஜ ஆளும் மாநிலங்களில் 5 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடைசியாக, கடந்த சில தினங்களுக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென நீக்கப்பட்டு, முதல் முறை எம்எல்ஏவான பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் மாநில பாஜ கட்சியில் மேல்மட்ட தலைவர்கள் கவலையிலும், அதிருப்தியிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த கருத்தரங்கு கூட்டத்தில் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் நிதின் கட்கரி, ‘‘சில எம்எல்ஏக்கள் அமைச்சராக முடியவில்லையே என்ற கவலையில் உள்ளனர். சில அமைச்சர்கள் நல்ல துறை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். நல்ல துறை கிடைக்கப் பெற்றவர்கள் முதல்வராக முடியவில்லை என கவலைப்படுகின்றனர். முதல்வர்களோ எப்போது தங்கள் பதவி பறிபோகும் என்ற கலக்கத்தில் உள்ளனர். பொது சேவையும், கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதுமே அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். பதவி அதிகாரத்தை கைப்பற்றுவதாக இருக்கக் கூடாது’’ என்றார். பாஜ முதல்வர்கள் தடாலடியாக மாற்றப்படும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை