மூன்றாவது அலை அச்சம் நிலவும் நிலையில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
மூன்றாவது அலை அச்சம் நிலவும் நிலையில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா 3வது அலை விரைவில் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று திடீரென அதிகரித்து வருவதாக நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகக் கொடூரமாக தாக்கி, தற்போதுதான் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், 3வது அலை அக்டோபரில் உச்சமடையும் என நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான தேசிய கொரோனா அவசர நிலை உத்தி வகுப்பு பணிக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நாடு முழுவதும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளில் 2.80 சதவீதமாக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கையானது, ஆகஸ்ட் மாதத்தில் 7.04 சதவீதமாக திகரித்துள்ளது. அதாவது, 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும், குழந்தைகளை தேவையில்லாமல் வெளியே நடமாட விட வேண்டாம், என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மூன்றாவது அலை முடிவுக்கு வரும்வரை, குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படி அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.* 130 குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்குமேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல அரியானா மாநிலம் சில்லி மாவட்டம் பல்வால் கிராமத்தில் 35 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு 9 பேர் பலியானது பரபரப்பாகி உள்ளது. டெங்குவால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் உபியில் டெங்குவால் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 579 ஆக உள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 213 ஆகும்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 207 ஆக குறைந்துள்ளது.* மொத்தம் 72.77 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* இந்தியாவில் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

மூலக்கதை