கொரோனா இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தினகரன்  தினகரன்
கொரோனா இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘கொரோனா பாதிப்பால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்தை வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என கூறினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை 6 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும்’’ என கடந்த ஜூன் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரீபக் பன்சால் தரப்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தொடரப்பட்டுள்ளது. அதில், ‘‘கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்களுக்கு, நிவாரணம் மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை நான்கு முறை ஒன்றிய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதியாக செப்டம்பர் 11ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால் ஒன்றிய அரசு மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை