தொடர்ந்து அதிகரித்து வரும் மொத்த விலை பணவீக்கம்

தினமலர்  தினமலர்
தொடர்ந்து அதிகரித்து வரும் மொத்த விலை பணவீக்கம்

புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை குறைவாக இருந்தபோதிலும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால், மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து இரட்டை இலக்க உயர்வில் இருந்து வருகிறது.கடந்த ஜூலை மாதத்தில் 11.16 சதவீதமாக இருந்தது; தற்போது ஆகஸ்டில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இதுவே 0.41 சதவீதமாக இருந்தது.ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம், உணவு பொருட்கள் அல்லாதவற்றின் விலை அதிகரித்தது ஆகும்.


குறிப்பாக தாது எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.அத்துடன், அடிப்படையான உலோகப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஜவுளி, ரசாயன பொருட்கள் ஆகியவற்றின் விலையும் கடந்த ஆண்டு ஆகஸ்டை விட மிகவும் அதிகரித்துள்ளது.

உணவு பொருட்களை பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை அதிகரித்திருந்தது.கடந்த திங்கள் அன்று வெளியான சில்லரை விலை பணவீக்கம் குறித்த அரசின் அறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் 5.3 சதவீதமாக ஓரளவு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை