தலிபான்கள் விதிக்கும் ஆடை கட்டுப்பாடு; பதிலடி கொடுக்கும் ஆப்கான் பெண் பிரபலங்கள்: சமூக ஊடகங்களில் வைரல்

தினகரன்  தினகரன்
தலிபான்கள் விதிக்கும் ஆடை கட்டுப்பாடு; பதிலடி கொடுக்கும் ஆப்கான் பெண் பிரபலங்கள்: சமூக ஊடகங்களில் வைரல்

காபூல்: ஆப்கானில் தலிபான்கள் பெண்கள் ஆடை விதிகளை கடுமையாக்கி வரும் நிலையில், சில ஆப்கான் பெண் பிரபலங்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாளில் இருந்து, அங்குள்ள பெண்கள் அடிமைத்தன சங்கிலிகளுடன் மீண்டும் பிணைக்கப்பட்டுள்ளனர். பெண்களின் கல்வி குறித்த கட்டுப்பாடுகளுடன், அவர்களின் ஆடைகள் அணிவதற்கும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். பெண்கள் என்ன படிப்பார்கள், எப்படி படிப்பார்கள், எங்கே போவார்கள், எப்படி உடைகளை அணிவார்கள் என்பதெல்லாம், தலிபான்களே முடிவு செய்வார்கள். ஆண்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கன் பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும். ஆண் ஆசிரியரிடம் மாணவிகள் பயிற்சி பெறக் கூடாது. ஆனால், தலிபான்களின் இதுபோன்ற உத்தரவுகளை ஆப்கான் பெண்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பாலின ஆய்வுத் திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய டாக்டர் பஹார் ஜலாலி என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் தைரியமாக சில புகைப்படங்களை வெளியிட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், ‘இது ஆப்கானிய கலாசாரம்; இதுதான், ஆப்கான் பெண்களின் பாரம்பரிய ஆடை; நானும் தற்போது பாரம்பரிய ஆப்கான் ஆடையை அணிந்திருக்கிறேன். ஆப்கன் பெண்கள் வண்ணங்கள் நிறைந்த அழகான ஆடைகளை அணிவார்கள். கருப்பு புர்கா ஆப்கானியர்களின் கலாசார ஆடை அல்ல’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை ஆதரிக்கும் வகையில், மனித உரிமை ஆர்வலரும், பிடிஎம் உறுப்பினரும், மருத்துவ தெரபிஸ்ட் ம்ஸ்போஷ்மே மசீத், பிரபல பத்திரிகையின் ஆசிரியர் மலாலி பஷீர் உள்ளிட்ட பெண்கள், ஆப்கான் பாரம்பரிய புகைப்படங்களையும், தங்களது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இது சமூக ஊடகங்களில் #FreeAfghanistan என்ற ஹேஷ்டேக்கில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை