நன்கு தேறி வருகிறார் பீலே: மகள் தகவல்

தினகரன்  தினகரன்
நன்கு தேறி வருகிறார் பீலே: மகள் தகவல்

சாவ் பாவ்லோ: பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் பீலே. 80 வயதான இவருக்கு உலகம் முழுவதும் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  2 மாதங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் நடந்த பரிசோதனைகளில் இவரது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போர்ச்சுகீஸ் நாட்டில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவரது தலையில் அறுவை சிகிச்சை செய்து, மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கினர். தற்போது அவர் நன்கு தேறி வருகிறார் என்று அவரது மகள் கெலி நாசிமென்டோ, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘‘எனது தந்தை இயல்பாகவே மன வலிமை மிக்கவர். இந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்களும் மிகத் திறமையானவர்கள். அதனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நன்கு தேறி வருகிறார் . தவிர உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவர்  பூரணமாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து, எங்களுக்கும் ஆறுதல் கூறினர். அவர் நன்கு உற்சாகமாக உள்ளார். ஜோக் அடிக்கிறார். மருத்துவமனையில் கொடுக்கப்படும் நன்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் ஜெல்லோவை (இனிப்பு கலந்த ஜெல்லி) விரும்பி சாப்பிடுகிறார். இன்றோ, நாளையோ ஐசியூவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீடு திரும்புவார்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்து உலகம் முழுவதும் உள்ள பீலேவின் கோடிக்கணக்கான ரசிகர்களும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

மூலக்கதை