ஏடிபி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோகோவிச்

தினகரன்  தினகரன்
ஏடிபி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோகோவிச்

பாரீஸ்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பைனலில் கோப்பையை தவறவிட்ட போதிலும், ஏடிபி தரவரிசையில் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பல ஆண்டுகளாக முதல் 3 இடங்களில் நீடித்திருந்த முன்னாள் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால், தற்போது தரவரிசையில் 6ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யு.எஸ்.ஓபன், நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் ஆடவர் ஒற்றையரில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், மகளிர் ஒற்றையரில் இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ராடுகனுவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆடவர் ஒற்றையருக்கான ஏடிபி மற்றும் மகளிர் ஒற்றையருக்கான டபிள்யூடிஏ தரவரிசை வெளியாகி உள்ளது. ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டியும் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர். யு.எஸ்.ஓபன் ஆடவர் ஒற்றையரில் ரன்னர் கோப்பையை கைப்பற்றிய ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் 12,133 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். யு.எஸ்.ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், 10,780 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ் 8,350 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (7,760 புள்ளிகள்) 4ம் இடத்திலும் மற்றும் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லேவ் (6,130 புள்ளிகள்) 5ம் இடத்திலும் உள்ளனர். ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக ஏடிபி தரவரிசையில் 6ம் இடத்திற்கு (5,815 புள்ளிகள்) இறங்கியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறிய நடால், காயம் காரணமாக அதன் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தரவரிசையில் 7ம் இடத்தில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி (5,173 புள்ளிகள்) மற்றும் 8ம் இடத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (4,995 புள்ளிகள்) உள்ளனர். முன்னாள் நம்பர் 1 வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (3,765 புள்ளிகள்) 9ம் இடத்திலும், கனடாவின் இளம் வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசைம் (3,368 புள்ளிகள்) 10ம் இடத்திலும் உள்ளனர்.

மூலக்கதை