'தலைவி' மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் தான் : தயாரிப்பாளர் தகவல்

தினமலர்  தினமலர்
தலைவி மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் தான் : தயாரிப்பாளர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்டு கற்பனைக் காட்சிகளுடன்தான் இந்தப் படத்தைப் படமாக்கினோம் என படத்தின் டைட்டிலில் அறிவித்து வெளிவந்த படம் 'தலைவி'.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலில் பெரும் சாதனை படைத்திருக்க வேண்டிய படம். இந்தியா முழுவதுமே படம் வெளியான நாளிலிருந்து 5 கோடி தான் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இந்தப் படம் மூலம் தங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

படத்திற்காக செலவு செய்த பட்ஜெட்டை தியேட்டர் அல்லாத உரிமைகளிலேயே பெற்றுவிட்டோம் என்று கூறியுள்ளார். ஹிந்தியில் இரண்டு வாரங்களில் ஓடிடி வெளியீடு என்பதால் அதற்காக ஒரு பெரிய தொகை அவருக்குக் கிடைத்திருக்கும் என்கிறார்கள். மேலும், தமிழ், தெலுங்கில் நான்கு வாரங்களில் ஓடிடி வெளியீடு என்பதால் அதற்கும் நல்ல தொகை கிடைத்திருக்கவே வாய்ப்புள்ளது.

இப்படத்தின் மூன்று மொழிகளுக்குமான ஓடிடி உரிமை மட்டுமே 55 கோடிக்கு விற்கப்பட்டதாக முன்னரே தகவல் வெளியாகி இருந்தது. மேலும், சாட்டிலைட் உரிமை மூலம் சுமார் 30 கோடி வரை கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

அந்த வருமானமே 85 கோடிக்கு வந்துவிட்டது. படத்திற்காக அதிக பட்சமாக 50 முதல் 60 கோடி வரை தான் செலவு செய்திருப்பார்கள் என்கிறது திரையுலக வட்டாரம். தியேட்டர் வருமானம் என்பது கூடுதல் வருமானம் தான். வட இந்தியாவில் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இந்தப் படத்தைத் திரையிட மறுத்துவிட்டன. அப்படி திரையிட்டிருந்தால் வசூல் இன்னும் கூடுதலாகக் கிடைத்திருக்கும்.

தற்போது தியேட்டர்கள் மூலம் ஏற்படும் இழப்பு, அவர்களது கூடுதல் வருமானத்தில் வரும் இழப்புதானே தவிர, வேறொன்றுமில்லை என்கிறார்கள்.

ஓடிடி உரிமை மூலம் மட்டுமே 'தலைவி' படம் தப்பிக்கும் வாய்ப்புள்ளது. அதனால்தான் பல தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களுக்கு நல்ல விலை கிடைத்தால் ஓடிடியில் விற்று விடுகிறார்கள். தியேட்டர்கள் மூலம் ரிஸ்க் எடுக்க பலரும் விரும்பவில்லை. தற்போது தயாராகி வரும் பல படங்கள் ஓடிடி வியாபாரத்தை மனதில் வைத்தும் உருவாக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

மூலக்கதை