ஆயிரம் சந்தேகங்கள்! கல்விக் கடனை செலுத்தியதற்கு வருமான வரி விலக்கு உண்டா?

தினமலர்  தினமலர்
ஆயிரம் சந்தேகங்கள்! கல்விக் கடனை செலுத்தியதற்கு வருமான வரி விலக்கு உண்டா?

நான், கடந்த 2017ல், தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றேன். வயது, 62. தற்சமயம் 1,408 ரூபாய் மாதாந்திர பென்ஷன் கிடைக்கிறது. இதை தவிர, மாநில அரசிடமிருந்து, வயதானவர்களுக்காக வழங்கப்படும் பென்ஷனும் பெற முடியுமா?

சிவராமன் ரவி, பெங்களூரு.

மாநில அரசின் முதியோர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராகவும், ஆதரவற்றவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவராகவும் இருக்க வேண்டும். வேறு வருவாய் ஏதும் இருக்கக் கூடாது. இந்த வரையறைகளுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளவும்.

நான் வாங்கிய கல்விக் கடனை முழுமையாக செலுத்தி விட்டேன். இதற்கு வருமான வரி விலக்கு கோர முடியுமா? கல்விக் கடனில் வட்டிக்கு மட்டும் விலக்கு என்று கூறுகின்றனர், ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ செய்ததற்கு விலக்கு பெற முடியுமா?

சதீஷ் குமார், மின்னஞ்சல்.

ஆம். கல்விக் கடனில் வட்டிக்கு மட்டுமே, ‘வருமான வரிச் சட்டப் பிரிவு 80 இ’யின் கீழ் விலக்கு கோர முடியும். கொடுக்கப்பட்ட கடன் முழுதும் மூழ்கிவிடாமல் தடுப்பதற்காகவே, ஒன் டைம் செட்டில்மென்ட் வசதியை வங்கிகள் தருகின்றன. வங்கி வழங்கும் செட்டில்மென்ட் ஆவணத்தில், அசலைத் தனியாகவும், வட்டியைத் தனியாகவும் குறிப்பிட்டுக் கொடுத்தால், அந்த வட்டிக்கு நீங்கள் விலக்கு கோரலாம்.

வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனிநபர் கடன் வாங்கினேன். முறையாக இ.எம்.ஐ., கட்டி வந்தேன். தற்போது கொரோனாவால் என்னால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. தவணை தொகையைக் குறைத்துக் கொள்ளுமாறு வங்கியில் கேட்க முடியுமா?

பாபு, மின்னஞ்சல்.

செப்டம்பர் கடைசி வரை, கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள முடியும். வங்கி கிளையை அணுகுங்கள்.

வங்கி இ.சி.எஸ்., வாயிலாக, என்னுடைய மியூச்சுவல் பண்டுக்கான எஸ்.ஐ.பி., தொகையை செலுத்தி வருகிறேன். என் வங்கிக் கணக்கில் போதிய பணம் வைத்திருக்கவில்லை என்றால் என்ன ஆகும்? மியூச்சுவல் பண்டில் ஒன்றும் பிரச்னை இல்லை என்கின்றனர், வங்கியில் என்ன ஆகும்?

ஜெய், சேலம்.

காசோலை திரும்ப வந்தால், என்ன கட்டணம் வசூலிக்கப்படுமோ, அதேபோன்ற கட்டணமே இ.சி.எஸ்.,சிலும் வசூலிக்கப்படும். மேலும், அடுத்த சில நாட்களிலேயே, வங்கி மீண்டும் இ.சி.எஸ்., செய்யலாம். எத்தனை முறை இ.சி.எஸ். செய்யலாம் என்பது வங்கியின் கொள்கை முடிவு. அதில் நீங்கள் தலையிட முடியாது. ஒவ்வொரு முறையும் பணமில்லாமல் உங்கள் இ.சி.எஸ்., பவுன்ஸ் ஆனது என்றால், வங்கியைப் பொறுத்து, 750 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படலாம்.

இ.பி.எப்.ஓ.,வில் ஓய்வூதியம் பெறும் பயனாளி இறந்துவிட்டால், அவர் செலுத்திய பங்களிப்புத் தொகை, அவருடைய கணக்கில் முழுதுமாக அப்படியே இருக்கும்போது, அவருடைய மனைவிக்கு 50 சதவீத ஓய்வூதியம் வழங்குவது சரியானதுதானா?

பி.வி.ரவிக்குமார், பம்மல்.

ஒரு பணியாளர் செலுத்தும் பங்களிப்புத் தொகைக்கு ஏற்ப, ஓய்வூதியமோ, விதவை ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை. அவர் பணியில் சேரும்போது, குறைவான தொகையையும், போகப் போக அதிகமான தொகையும் செலுத்தியிருப்பார். அந்தப் பணியாளர் மொத்தமாக எவ்வளவு செலுத்தியிருப்பார் என்பது இங்கே கணக்கிடப்படுவதில்லை. அவரது பணிக்காலம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தில், மனைவிக்கான ஓய்வூதியம், அனாதைகளாகும் பிள்ளைகளுக்கு 25 வயது வரை வழங்கப்படும் ஓய்வுதியம் என, பல்வேறு தரப்பினரது தேவைகளைக் கருத்தில் கொண்டும் உதவி வழங்கப்படுகிறது. இது ஒரு வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டமே அன்றி, சேமிப்புத் திட்டம் அல்ல.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில், பொதுமக்களாகிய நாம், வரிச் சலுகை பெற முடியுமா?

குமரேஷ், மதுரை.

இரண்டு வகைகளில் பெற முடியும். ‘டையர் 1’ல் நீங்கள் செய்யும் பங்களிப்பை, 80 CCD (1)ன் கீழ் காண்பிக்க முடியும். மேலும், என்.பி.எஸ்., டையர் 1ல் முதலீடு செய்பவர் பிரத்யேகமாக, வருமான வரி பிரிவு 80CCD (1B)யின் கீழ், 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வரிச் சலுகை பெற முடியும். இது 80C பிரிவில் பெறும் 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை இல்லாமல், கூடுதல் வரிச் சலுகை ஆகும்.

நான் அரசு ஊழியர். வயது, 32. மாதம் 32 ஆயிரம் ரூபாய் நிகர ஊதியம் பெறுகிறேன். 26 ஆண்டுகள் இன்னும் பணிக்காலம் உள்ளது. கடன் இதுவரை கிடையாது. வருங்காலத்திற்காக சேமிக்க விரும்புகிறேன். பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடுகள் செய்யலாமா?

ஜெயச்சந்திரன், துாத்துக்குடி.

தாராளமாக செய்யுங்கள். ‘ரிஸ்க்’ எடுக்கும் வயது இது. பல்லைக் கடித்துக் கொண்டு, மாதா மாதம் 10 ஆயிரம் சேமியுங்கள். வருமானம் உயர உயர, சேமிப்பையும் அதிகப்படுத்துங்கள். மகள் மேற்படிப்பு செலவு, மகன் திருமண செலவு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், ஓய்வூதிய பங்களிப்பு என இலக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

பங்குகளை பொறுத்தவரை, அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யுங்கள். ஆனால் வர்த்தகம் செய்யக் கூடாது. திட்டமிட்டால் உங்களுக்கு இமயமும் தொட்டுவிடும் துாரம் தான்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் என்னை, வீட்டுக் கடன் பெற்று, வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு பெற்றோர் கூறுகின்றனர். கடனுக்காக மாத தவணை செலுத்த வேண்டிய தொகையை, மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா?

பிரதீப் குமார், மின்னஞ்சல்.

தைரியமாக இறங்குங்கள். மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மல்டி கேப் பண்டுகள், ஹைபிரிட் பண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். ஈவுத்தொகை பண்டுகளுக்குப் போகாமல், ‘குரோத்’ பண்டுகளிலேயே எஸ்.ஐ.பி., போடுங்கள். ஒன்றைவிட இன்னொரு பண்டு சிறப்பாக இருக்கிறது என்று நினைத்து தாவிக்கொண்டே இராதீர்கள். நல்ல பண்டுத் திட்டங்களாக தேர்வு செய்து, அதிலேயே தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைவீர்கள்.

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, இ--–மெயில் மற்­றும் வாட்ஸ் ஆப் வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ், [email protected]
98410 53881

மூலக்கதை