'கொரோனா இறப்பு விவரத்தை மறைக்கும் இந்தியா:' டிரம்ப் சர்ச்சை கருத்து

தினமலர்  தினமலர்
கொரோனா இறப்பு விவரத்தை மறைக்கும் இந்தியா: டிரம்ப் சர்ச்சை கருத்து

வாஷிங்டன்: 'இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த முழு விவரத்தை அளிக்கவில்லை' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 74 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை. அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்துச் சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்,'' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதற்கு அதிபர் டிரம்ப், 'சீனாவில் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ரஷ்யாவிலும், இந்தியாவிலும் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்றும் உங்களுக்குத் தெரியாது. இந்த நாடுகள் கொரோனாவால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகள் குறித்த தகவலை அளிக்கவில்லை' எனத் தெரிவித்தார்.

இந்தியா குறித்த டிரம்பின் கருத்து, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை