ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு

திருமலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அமிலம் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றது. குண்டூர் மாவட்டம் மங்களகிரி காஜா சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென டேங்கர் லாரியின் டயர் பஞ்சர் ஆனது. அதேநேரம் டேங்கரில் இருந்து அமிலம் கசிந்தது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டேங்கர் லாரியை அருகே உள்ள ஒரு காலியிடத்தில் கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விஷவாயு கசிவை சரிசெய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை