உத்தரபிரதேசத்தில் பலாத்கார கொடூரத்தின் உச்சம் :மகளுக்கு இறுதிசடங்கு செய்ய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு; வலுகட்டாயமாக அதிகாலையில் தகனம் செய்த போலீசார்

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேசத்தில் பலாத்கார கொடூரத்தின் உச்சம் :மகளுக்கு இறுதிசடங்கு செய்ய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு; வலுகட்டாயமாக அதிகாலையில் தகனம் செய்த போலீசார்

அலகாபாத்,: உத்தரபிரதேசத்தில் பலாத்கார கொடூரத்தின் உச்சமாக இறந்த மகளுக்கு இறுதிசடங்கு செய்ய பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்த அவலம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அடுத்த ஹத்ராஸ் பகுதியில் கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி வயலுக்கு சென்றார். வயல்வெளியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்தப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டா துணியை அவள் கழுத்திலேயே போட்டு இறுக்கியுள்ளனர். அதனால் கழுத்து எலும்பு நொறுங்கி, தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அந்த பெண்ணால் கை கால்களை இயக்க முடியவில்லை. பரிதாப சூழ்நிலையில் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அந்த பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் 10 நாட்களுக்கு பின்னர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த இளம் பெண் நேற்று அதிகாலை சப்தர்ஜங்  மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. மாநில பாஜக அரசு, அந்த இளம் பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவரை டெல்லிக்கு அனுப்ப நிர்வாகம் தாமதம் செய்ததால் அந்த பெண் உயிரிழந்தார் என்று குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் ஹத்ராஸ் போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லி மருத்துவமனையில் நேற்றிரவு 10.10 மணிக்கு புறப்பட்ட இறந்த அந்த ெபண்ணின் உடல், நேற்றிரவு 12.45 மணியளவில் ஹத்ராஸ் கிராமத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கு செய்தற்காக, போலீசாரிடம் அனுமதி கோரினர். மேலும், இறந்த பெண்ணின் உடலை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல  குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் அனுமதியளிக்கவில்லை. ெபற்றோர் எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் அவர்களின் கோரிக்கை நிராகரித்தனர். கடைசியாக  குடும்பத்தினரை வீட்டில் அடைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் வீட்டு வாசில் நின்ற ஆம்புலன்ஸ், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சுமார் 200 போலீசாரின் பாதுகாப்புடன் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்  சடங்கின் போது காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை சுற்றி வளைத்தனர். யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாலை 2.45 மணியளவில் காவல்துறையினரே  அந்த பெண்ணின் உடலுக்கு தீ வைத்தனர். காவல்துறையினர் இறுதிசடங்கு செய்ததால், கிராம  மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் : இளம்பெண்ணின் தாயார்

மூலக்கதை