மலையேற்றத்திற்கு கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
மலையேற்றத்திற்கு கட்டுப்பாடு

மலையேற்றத்திற்கு கட்டுப்பாடு

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாள அரசு, கொரோனா பரவலை தடுக்க, மலையேறுவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மலையேற்றத்துக்கு வருவோர், ஓட்டலில், குறைந்தபட்சம் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதற்கான முன்பதிவு ரசீதை காட்ட வேண்டும்.மலையேறத் துவங்கும் முன், 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழ் காட்ட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலவுக்கு ஆளில்லா விண்கலம்

துபாய்: மேற்காசியாவைச் சேர்ந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. வரும், 2024ல், இந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என, துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும், 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நிலவில் இறங்கி ஆய்வு செய்த நான்காவது நாடு என்ற சிறப்பை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெறும்.

மருத்துவ குழும கணினி முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள, 'யுனிவர்சல் ஹெல்த் சர்வீசஸ்' நிறுவனம், 250 மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. நேற்று முன்தினம், இந்நிறுவனத்தின் கணினி ஒருங்கிணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது; இது, கணினி செயல்பாட்டை முடக்கி, பிணைத் தொகை கேட்கும் மோசடி கும்பல்களின் கைவரிசை என, கருதப்படுகிறது.எனினும், 'பேக்அப்' வசதி மூலம், மருத்துவமனையின் செயல்பாடுகள் சீராக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பசுவைக் கொல்ல தடை

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில் பசுவைக் கொல்ல தடை விதிக்கும் திட்டத்திற்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, விரைவில் சட்ட திருத்தம் செய்யப்பட்டு, தடை அமலுக்கு வரும் என, அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டில், மாட்டிறைச்சி தேவையை சமாளிக்க, அதை அதிக அளவில் இறக்குமதிசெய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடித்து விபத்து; 5 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம், நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள ஒரு இரும்புக் கழிவு கிடங்கில், பழைய பீரங்கி குண்டை செயல் இழக்கும் வேலை நடந்தது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது.இந்த விபத்தில், பணியில் இருந்து, ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில், அருகில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.

மூலக்கதை