15 ரன் வித்தியாசத்தில் கேப்பிடல்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

தினகரன்  தினகரன்
15 ரன் வித்தியாசத்தில் கேப்பிடல்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

அபுதாபி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்ஸ் இடம் பெற்றார். தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன் சேர்த்தனர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் 45 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அமித் மிஷ்ரா சுழலில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன் மட்டுமே எடுத்து மிஷ்ரா பந்துவீச்சில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ஐதராபாத் அணி 11.2 ஓவரில் 92 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சற்று பின்னடைவை சந்தித்தது.இந்த நிலையில், பேர்ஸ்டோவுடன் இணைந்த கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். அரை சதம் விளாசிய பேர்ஸ்டோ 53 ரன் எடுத்த நிலையில் (48 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ரபாடா வேகத்தில் நோர்ட்ஜேவிடம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து வில்லியம்சனுடன் அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். வில்லியம்சன் 41 ரன் (26 பந்து, 5 பவுண்டரி) விளாசி, ரபாடா வேகத்தில் அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. அப்துல் சமத் 12 ரன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.டெல்லி பந்துவீச்சில் அமித் மிஷ்ரா, காகிசோ ரபாடா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிரித்வி ஷா 2 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் பிடிபட, டெல்லி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து ஷிகர் தவானுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில், ஷிகர் தவான் 31 பந்துகளில் 34 ரன்களும், ஷ்ரேயாஸ் 21 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ரஷித் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மியர் 21, ஸ்டோய்னிஸ் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகினர். பின்னர் விளையாடிய ரபாடா 15, நோர்ட்ஜே 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  20 ஓவர்கள் முடிவில் கேபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை