கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு

மதுரை : மதுரையில் ஊராட்சிகளில் கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பான செலவு விவரங்களை அக்.,2 காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்களில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தியது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இரண்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் அக்.,2 மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வினய் சிறப்பு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. மாவட்ட செயலாளர் ராம்குமார் கூறுகையில், ''மக்கள் முன்னிலையில் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினம் விவரங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடந்த திட்டங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிட வேண்டும். துண்டு பிரசுரம் மற்றும் தண்டோரா மூலம் கூட்டம் நடப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.

மூலக்கதை